போ(ங்காட்ட)பால் தீர்ப்பு - சித்ரா

இந்த தீர்ப்பு, ஒரு தனிப்பட்ட சம்பவத்தில் உள்ள "ஆடு புலி ஆட்டமாக" என்னால் பார்க்க முடியவில்லை.... இத்தனை நீதிபதிகள், ஒரே வழக்கில் மாறி வரும் போதும் கால தாமதமும், பண பலமும் கடுமையாக வழங்க வேண்டிய தண்டனையை நீர்த்து போக செய்து விட்டன.

இந்தியா ஒரே தேசமாக இல்லாத நிலையில் கூட, "வெள்ளையனே வெளியேறு" என்று ஒன்று பட்டு , அநியாய அடக்கு முறைகளுக்கு எதிராக போர் கொடி தூக்கி அடிமைத்தனத்தில் இருந்து மேலோங்கி சுதந்தர காற்றை சுவாசிக்க முடிந்தது....

இன்று - ஒரே இந்தியாவாக.... இந்தியனுக்கு என்று தனித்துவ அடையாளங்களுடன் உலக அரங்கில் காணப்படும் இந்த வேளையில், இப்படி ஒரு தீர்ப்பு வந்து இருப்பது எதை காட்டுகிறது?

இந்தியா, இன்னும் பணத்துக்கும் மனசாட்சியை கொன்று விட்டு அரசியலும் வாணிகமும் (politics, business and industrial production) செய்பவர்களுக்கு அடிமையாய் இருக்கிறது என்றா?

இல்லை, இந்தியர்கள் சுதந்தரத்துக்கு பின், சுகவாசிகளாய் - சுயநலக்காரர்களாய் - தன் கவலை மட்டுமே பெருங்கவலை என்ற குறுகிய வட்டத்துக்குள் வந்து விட்டார்கள் என்றா?

நாட்டில் ஒரு பகுதியினர் அடக்கப்பட்டால், மற்றவர்கள் வெகுண்டு வந்து ஆவன செய்வார்கள் என்ற தேசிய உணர்வு மக்கி விட்டது என்றா?

காரணங்கள் அனைத்தும் தெரிந்தும், கண்டும் காணாதது போலவும் புரிந்தும் புரியாதது போலவும், 'தன் வேலையே தனக்கு உதவி' என்று இருக்க வேண்டிய கட்டாயத்துக்குள் சமூதாய அமைப்பு தள்ளி விடுகிறது என்றா?

தலைவலியும் காய்ச்சலும் வந்தவனுக்கு மட்டும் தான் என்று ஒதுங்கி போக பழகிவிட்ட மெத்தனப் போக்கு என்றா?

பாரதியின் பாடலில் கண்ட அக்கினி பற்றி கொள்ள - தாகூரின் கவிதைகளில் கண்ட தேசப்பற்று மனதில் நிறைய - சுதந்தர போராட்ட வீரர்களின் ஆவேசமான பேச்சுக்களில் பொங்கி எழுந்து வந்த இந்தியர்கள், இன்று வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் தொலைகாட்சி மற்றும் சினிமா மாயையில் மயங்கி, உணர்வுகளை தொலைத்து விட்டார்கள் என்றா?

மக்களின் பலவீனங்களை முழுமையாக அறிந்து கொண்டு, "என்ன செய்து விடப் போகிறார்கள்?" என்ற தைரியத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு..... மக்களின் அவல மன நிலையை "அவர்கள்" நன்கு புரிந்து கொண்டு, தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு உள்ளதை வெளிப்படுத்தும் தீர்ப்பு.

ம்ம்ம்ம்...... தீர்ப்பை திருத்த முடியாது போகலாம். போபாலில் இழந்த உயிர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய் இருந்து இருக்கலாம்.....

ஆனால், மக்களிடையே ஒரு விழிப்புணர்வு வேண்டும்.... இனி, ஒரு இந்திய சகோதரன் அழும் போது, கைகளில் டிவி ரிமோட் வைத்து கொண்டு, "அடுத்து என்ன ப்ரோக்ராம்?" என்று தேடி கொண்டு இருக்காமல், அதே கையால், அழுபவரின் கண்ணீர் துடைக்க மனம் பதற வேண்டிய உள்ளம் வேண்டும். அந்த மாறுதல் வரும் போது, இந்த மாதிரி மீண்டும் ஒரு சம்பவம் நடக்கும் அளவுக்கு ஒரு பொறுப்பற்ற சூழ்நிலையோ - இல்லை, அதற்கு இப்படி ஒரு "கண்துடைப்பு" தீர்ப்போ எப்படி வர இயலும்?

முதாலாளித்துவம் கொழுத்து போய் வளருகிறது என்று சாடுவது மட்டும் போதாது..... சராசரி மனிதனும் மனித நேயத்தை, பிறர்க்கென வாழும் மனதை, தேசிய உணர்வை - முழுவதுமாய் பணத்துக்கும் தற்பெருமைக்கும் தன்னலத்துக்கும் அடகு வைக்க கூடாது.


-சித்ரா

பதிவுலக தோழி "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா அவர்கள் இத்தளத்திற்காக எழுதிக் கொடுத்தது. இன்னும் பல பதிவர்கள் மற்றும் வாசகர்களிடமிருந்து இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.


8 comments:

dheva said...

கட்டுரையை சமர்ப்பித்திருக்கும் தோழி சித்ராவிற்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!


புலிகேசி...@ உங்களின் இடுகையை வாசித்தேன்....போபால் தீர்ப்பு பற்றி என்னுடைய புரிதலைத் தீவிரப்படுத்திக் கொண்டுள்ளேன்...வெகு சீக்கிரமே கட்டுரை தருகிறேன் தோழர்....! தோள் கொடுப்போம் நிச்சயமாய்....குறைந்த பட்ச புரிதலை மனிதர்களிடம் கொண்டு சேர்ப்போம்!

Radhakrishnan said...

மரத்து போன மனம் கொண்ட மனிதர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் உரைக்காது சித்ரா. அரிய பணியை செய்து வரும் புலவன் புலிகேசி அவர்களுக்கு வாழ்த்துகள்.

வெண்ணிற இரவுகள்....! said...

போபால் தீர்ப்புக்கு உலகமயமாக்கலும் முதலாளித்துவமும் பிரதான காரணம் தோழி . அது தான் பிரதான எதிரி .
முதலாளித்துவமே எந்திரமான மனிதனை உருவாக்குகிறது , அவன் எந்திரமான வாழ்கையில் அடுத்தவனை பற்றி
சிந்திக்க வழி இல்லாமல் ஆக்குகிறது , மனிதநேயம் என்று நீங்கள் சொல்வது போல் இல்லாமல் ஆக்குவதே முதலாளித்துவம் ,
அதிகபட்ச சுரண்டல் இங்கு இருக்கிறது . நீங்கள் சொல்வது போல் மனிதநேயம் என்று ஒன்று வரவேண்டுமென்றால் கூட
முதலாளித்துவம் ஒழிய வேண்டும் .மூன்றாம் நாடுகள் சேரிகளாய் உபோயோகப்படுத்தபடுவது ஒழிக்க படவேண்டும் .
இங்கு உயிர் என்ன மயிரா , இந்திய உயிர்களை ஆய்வுக்கூடம் போல உபயோகப்படுத்தும் முதலாளிகள் ஒழிக்க பட போராட்டம் வேண்டும் .
இங்கு மனிதநேயம் வைத்து ஒன்றும் செய்ய முடியாது . மக்கள் அணிதிரண்டு போராடுவதால் மட்டுமே இது சாத்தியம் தோழி .
மற்றபடி போபலுக்காய் குரல் கொடுத்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி .

ஜோதிஜி said...

முதாலாளித்துவம் கொழுத்து போய் வளருகிறது என்று சாடுவது மட்டும் போதாது.....

நூறு சதவிகித உண்மையும் கூட.........

சராசரி மனிதனும் மனித நேயத்தை, பிறர்க்கென வாழும் மனதை, தேசிய உணர்வை - முழுவதுமாய் பணத்துக்கும் தற்பெருமைக்கும் தன்னலத்துக்கும் அடகு .......................


சித்ரா எங்கேயே போயிட்டிங்க. எதார்த்தமான வார்த்தைகள் வரிகள். வாழ்த்துகள்.

Unknown said...

முதல்லாளிதுவத்தின் மோசமான தன்மையை இன்னும் இந்திய தேசம் உணரவில்லை என்பதே வருத்தம்...

புலவன் புலிகேசி said...

சித்ரா மனிதம் என்பது விடம் பாதித்த பிறகு தேவைப்படும் மருந்துகள். ஆனால் இங்கு அந்த விடமாக அந்த மக்களையும், எதிர்காலத்தில் நம்மையும் கொல்லப் போவது இந்த முதலாளித்துவம் தான்.

Deepa said...

//மக்களின் பலவீனங்களை முழுமையாக அறிந்து கொண்டு, "என்ன செய்து விடப் போகிறார்கள்?" என்ற தைரியத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு..... மக்களின் அவல மன நிலையை "அவர்கள்" நன்கு புரிந்து கொண்டு, தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு உள்ளதை வெளிப்படுத்தும் தீர்ப்பு.//

சரியாகச் சொன்னீர்கள். மனதை அறுக்கும் உண்மை இது தான்.
அருமையான இடுகை.

அ.முத்து பிரகாஷ் said...

வெட்டிப் பேச்சல்ல இது ..
விழிப்புணர்வூட்டும் ஆவேச பேச்சு ...
தோழருக்கு வணக்கங்கள்!

Post a Comment

Copyright © போபால்