மக்களாட்சியின் உளுத்துப் போன தூண்கள்

2 comments

ஒரு நிகழ்வின் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு என்பது ஏனைய சம்பவங்கள் எனில் கொண்டாட்டமாக இருந்திருக்கக் கூடும். அது சமயம் அது குறித்து பல அறிக்கைகள் வெளியிட்டு பற்பல கொண்ட்டாட நிகழ்வுகள் கூட அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு முடிந்த அளவு கூத்தடித்திருப்பார்கள். ஆனால் இந்நிகழ்வின் இருபத்தைந்து ஆண்டில் வெளிவந்த இவ்வழக்கின் தீர்ப்பானது இந்திய மக்களாட்சியைப் பீடித்த புற்றுநோய் முற்றிப்போனதன் மருத்துவ அறிக்கையாக வெளிப்பட்டது.

இது குறித்து யாரும் வேதனைப்பட்டதாகவோ அல்லது அதிகம் சிந்தித்ததாகவோ தெரியவில்லை. அப்படி செய்திருந்தால் மட்டுமே நமக்கெல்லாம் ஏமாற்றமாக இருந்திருக்கும். நல்லவேளை அரசியல் தலைவர்களும் அரசுயர் அதிகாரிகளும் இந்திய தேசத்தின் நீதித்துறையும் இந்தமுறை மக்களை ஏமாற்றவில்லை என்பது பெருமகிழ்ச்சியளிக்கக் கூடிய விடயமாகும்.

உண்மைதான் மக்களே நம்புங்கள் அவர்கள் உங்களை ஏமாற்றினார்களோ இல்லை ஏமாற்றவில்லையோ தெரியவில்லை ஆனால் பெருமுதலாளிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டார்கள் என்பது உண்மை.

இருபத்தைந்து ஆண்டுகள் நடந்த (படுத்துக்கிடந்த) ஒரு வழக்கின் அது என்னவென்றால் பல்லாயிரம் மக்களை நடுஇரவில் கவனக்குறைவால் மரணிக்கச்செய்ததும் மற்றும் சில லட்சம் மக்களை முடவோராக்கியும் அவர்களது அடுத்த தலைமுறைக்கும் அந்த அத்துணை கொடுமைகளையும் அனுபவிக்கத்தந்ததுமான ஒரு கொடூர குற்றத்தின் தண்டனை நிர்ணயிக்கப்பட்டது அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளும் சில ஆயிரம் அபராதமும். உடனே இயற்கை நீதியின் நியதிப்படி மேல்முறைய்யீட்டற்கு விண்ணப்பித்திருப்பதால் ஜாமீனில் வெளிவந்தார்கள்.

இவ்வழக்கில் இந்திய அரசியலமைப்பின் மூன்று தூண்கள் எவ்வாறு கடமையாற்றின என்றறிவது இந்திய மக்களாட்சியின் உளுத்துப் போன தூண்களின் உண்மை நிலையை அறியலாம்.

முதல் தூணாம் அரசு

அரசு என்பது ஆரம்ப கால குழு முறை அரசிலிருந்து மன்னராட்சி கண்டு இப்போதிருக்கும் மக்களாட்சியாக பரிணமிக்க எடுத்துக் கொண்ட காலம் கொஞ்சமல்ல. கடந்து வந்த பாதையும் இனிய எளிய பாதையல்ல. இத்துணை காலகட்டங்களிலும் நடந்து வந்த அத்துணை முறைகளிலும் ஆகச்சிறந்த அரசியல் முறையானது இந்த மக்களாட்சி முறைதான்.

மக்களாட்சியின் தத்துவம்தான் படிக்க கேட்க என்ன இனிதாக இருக்கிறது

மக்களே மக்களால் மக்களுக்காக.

இப்பேர்பட்ட மக்களாட்சி நிலவும் இந்தியாவில் அரசானது மத்திய அரசு மாநில அரசு என்ற இரு பிரிவுகளில் வருகிறது.

மாநில அரசு

இன்னும் உயிருடன் உள்ள அன்றைய மாநில முதலமைச்சருக்கு இந்த பத்திரிக்கைகாரர்களின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய இக்கட்டான நிலையில் என்ன சொல்வது என்று தெளிவாகச் சொல்லாமல் விட்டு விட அவர் பாவம் சில நாட்களாக எங்கோ போய் சாதாரண திருடனாட்டம் ஒளிந்து கொள்ள வேண்டி வந்தது பாருங்கள் பாவம் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. நல்ல வேலை யாரும் ஆள் கொணர்விப்பு மனு போடும் முன்னர் கண்டு பிடித்து வெளிச் சொல்ல வந்து விட்டார். இறந்து போன நரசிம்ம ராவ் (யாருக்கு மகனெல்லாம் அரசியல்ல பெரிய ஆளா வளரலையோ) அவர்தான் காரணமாம். ஆண்டர்சன் என்ற நல்ல பாம்புக்கு விடம் ரொம்ப அதிகம் பாருங்க அதனை அடிக்கத்தான் முடியல. அதனால அதுகிட்ட இருந்து மக்களை காப்பாற்றத்தான் அவனை அமெரிக்கா அனுப்பி விட்டுட்டோம்னு சொல்லாம விட்டாரு பாருங்க அதுவரைக்கும் சந்தோசம்.

நான் பல சமயம் எண்ணியதுண்டு. தி மு க வினரைப்போல படித்த கொள்கை வழி வந்த தனது மகனுக்கு ரசிய கம்யூனிஸ பெருந்தலைவரின் பெயரைச் சூட்டிய அரசியலமைப்பில் திருத்தம் வேண்டி கமிட்டி அமைத்து மத்திய அரசுக்கே பரிந்துரையை அனுப்பிய இன்னமும் மாநில சுயாட்சி வேண்டி கடிதம் எழுதும் தலைவரே அந்நிய நாட்டின் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பத்தில் மற்றைய மாநிலங்களுக்கு உதாரண புருஷனாக மாறிப்போகையில் மக்களாட்சித் தத்துவத்தில் வரும் மக்களுக்கு என்பதனை அதன் தலைவர் செந்தமிழ் கொண்டு மிகச்சரியாக உணர்ந்து ஆட்சி புரியும் போது மத்திய அரசின் கைக்கூலியாக அவர்களின் தயவிலும் கடைக்கண் கருணையிலும் ஆண்டு கொண்டிருந்த அதே கட்சியின் மாநிலப் பிரிவை என்னவென்று நொந்துகொள்வது.

எனவே முதுகெழும்பில்லாத மாநில அரசைப்பற்றி எவ்வளவுதான் திட்டுவது எழுதுவது.

மத்திய அரசு

இன்றைய புதிய பொருளாதார கொள்கை என்றும் தாரளமயமாக்கல் என்றும் திறந்த சந்தைப் பொருளாதாரம்என்றும் சொல்லப்படுகிற பெரும் முதலாளிகளுக்கு குடை பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் 1991ல் அறிமுகப்படுத்தப் பட்டதாக அறிந்தாலும் டாட்டா போன்ற பெரும் முதலாளிகளையே அதற்கு முன்னர் அரசுடமையாக்கல் மற்றும் இன்னபிற அரசு கொள்கைகள் மூலம் திறரடித்ததாகவும், இன்று தனது தேவைகளுக்கேற்ப அரசுகளையும் அரசு நிர்வாகத்தையும் வளைக்கும் ரிலையன்ஸ் நிறுவனமே புதிய பொருளாதார கொள்கைகள் வரும் வரையில் பற்பல அரசு விதிமுறைகளை சட்ட விரோதமாக மீறியும் உடைத்தும் அரசின் உயர் அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் சரியான முறையில் கவனித்தும் இருந்து வந்ததாக கேள்விப்பட்ட வகையில் ஏனைய்யா இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு அமெரிக்க முதலாளியை கேள்வி கேட்க வக்கில்லாமல் விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து விருந்து சாப்பாடு போட்டு மாநில முதல்வரின் சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தது ( இலவசமாய்த்தானா இல்லை அதற்கும் ஏதாவது தனியாக கமிசன் கிடைத்ததா ? ) என்று கேள்வி கேட்போருக்கு ஏன் அவர்களால் உண்மையைச் சொல்ல முடியவில்லை என்று புரியவில்லை.

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். உண்மை இதுதான்.

சாவு நமது வீட்டில் என்பதற்காக வந்த விருந்தாளிக்கு நமது கஷ்டத்தை காட்ட முடியுமா என்ன ? அதனால்தான் நமக்கு மட்டுமே உரித்தானதாக நாம் சொந்தம் கொண்டாடி வரும் விருந்தோம்பலை அப்போதும் அவ்வளவு ஆயிரம் இழவுகள் விழுந்த வேளையிலும் காட்டியது இந்திய அரசு.

எனவே மத்திய அரசின் விருந்தோம்பல் கொள்கையை அறியாது பேசும் மக்கள் யாவரும் மன்னிப்பு கேட்டுக்கொள்ள சமயம் வாங்கித்தரும்மாறு யாராவது எல்லாம் கொள்ளையடித்த பெரியவரை அழைக்கிறேன்.

இந்திய தேசியத்திற்காக போராடி உயிர் விட்ட எழுபத்தைந்து மத்திய ரிசர்வ் காவல் படையின் வீரர்கள் உயிருக்கு போராடிக் கிடந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்யவா நமக்கு விமானமும் ஹெலிகாப்டரும். எதாவது ஒரு பெரு முதலாளியின் நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு பொதுமக்களின் கோபத்தால எவ்வித இழப்பும் ஏற்பட்டு விடாமல் காக்க எப்போதும் அவை காத்திருப்பில் இருக்க வேண்டியது அவசியம் என்ற கொள்கை வகுத்த தலைவர்கள் நமது விருந்தோம்பலை உலகறியச் செய்யும் நடவடிக்கைகளுக்கு தோழர்கள் யாவரும் தோள் கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

மற்றொரு தூணாம் அரசாங்கம்

அரசாங்கத்தைப் பற்றி என்ன சொல்வது. அரசும் நானே அரசாங்கமும் நானே என்று எல்லா துறைகளையும் மந்திரி பதவி கொடுத்து அவங்க கையிலயே வைத்துக் கொண்ட பிறகு அதனை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை.

இருந்தாலும் பாருங்கள் இன்னும் இந்த ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகள் தான் உண்மையிலேயே நாட்டை ஆள்கிறார்கள் என்பது கிட்டத்தட்ட உண்மையே. எந்த அரசியல்வாதிக்கும் திட்டங்களை வாகுத்துக் கொடுப்பதும் எந்த சட்டத்தையும் வரைவு செய்வதும் மற்றும் சட்டவடிவு பெற்ற பின்னர் அவற்றை நடைமுறைப் படுத்துவதும் எல்லாமே இவர்கள்தான். (ஆனால் இறுதியாக எல்லாவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை நமது மந்திரிகள் கையில் வைத்திருபதால் இவர்களும் கொள்ளையில் தனியாக ஈடுபட முடியாமல் இந்த வீணாய்ப்போன ஒன்றும் தெரியாத அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் பெரும் பங்கு சம்பாரித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது தனி சோகக் கதை.)

ராகுல் காந்தி தனது மொபைலை விமான நிலையத்தில் தவற விட உடனே அரசாங்கம் அதானுங்க அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை அரசு அதிகாரிகளின் செயல்திறனுக்கே ஒரு உதாரணம்..

அதேபோல பாருங்களேன் அவர்கள் போபால் சம்பவத்தில் என்ன அசுர வேகத்தில் நடவடிக்கை எடுத்தார்கள் என்று

சம்பவம் நடந்தது. 02.12.1984

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 01.12.1987

வெகு விரைவாக மூன்றே நாட்களில் வருடங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த மத்திய புலனாய்வுத்துறையினருக்கு (சி பி ஐ - C B I)யாரேனும் ஒரு பாராட்டு விழாவேனும் நடத்தியிருப்பார்களா இந்த நன்றி கெட்ட போபால் மக்கள். அதனாலேயே உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் 13.09.1996 இல் வழக்கின் இந்திய தண்டனை பிரிவை மாற்றி குறைந்த தண்டனை அளிக்கும் பிரிவின் கீழ் விசாரிக்கும் படி சொல்ல சோர்ந்து போன சி பி ஐ ஆனது அதற்கு அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு மேல்முறையீடு ஏதும் செய்யாமல் விட்டுவிட்டது.

இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகு அரசியல் தலைவர்களின் கீழே வேலை செய்யும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம் கொடுத்து விடுகிறேன் பாருங்கள்.

முன்னாள் ஹரியானா டி.ஜி.பி எஸ்.பி.எஸ்.ரதோர் தனது அதிகாரத்தை அரசாங்க பதவியை எவ்வளவு உண்மையாக உபயோகம் செய்தார் என்றும் அதற்கு துணையாக ஹரியானா காவல்துறை எப்படியெல்லாம் நேர்மையாக செயல்பட்டது என தெரிந்து கொள்வீர்களேயானால் போதும் இந்திய அரசாங்கத்தின் அத்துணை செயல்பாடுகளும் உங்களுக்கு நொடியில் அத்துபடியாகி விடும்.

உண்மையிலேயே தெரியாதவர்கள் ruchika case அல்லது former hariyana DGP S.P.S Rathore என்று கூகுலாத்தாவிடம் தேடிப்பாருங்கள்.

. மூன்றாம் தூணாம் நீதித்துறை

பலரும் இன்று இந்த தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். உண்மையில் விமர்சிக்க வேண்டிய விசயம் இவ்வழக்கின் முக்கிய திருப்பமான இவ்வழக்கினை இந்திய தண்டனை சட்டம் பிரிவு கொலைக்குற்றமல்லாத மரணம் வேண்டியதில்லை குற்றமுறு கவனக்குறைவு (criminal negligence) என்ற பிரிவின் கீழ் விசாரித்தால் போதும் என்ற உச்ச நீதிமன்றத்தின் முடிவைத்தான்.

இப்போது அளிக்கப்பட்ட தீர்ப்புதான் பதிவு செய்யப்பட பிரிவுகளின் கீழ் வழங்கப்படக் கூடிய அதிகபட்சம். இத் தன்டனையை இவ்வழக்கு பதியப்பட்டபின் அதிகரித்திருந்தாலும் அது அந்த வழக்குக்கு பொருந்தாது. (உள்ளதைத்தாணுங்க சொல்லறேன்). எனில் இந்த தீர்ப்பை விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது. உண்மை அன்றே அவ்வழக்கின் முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதன்பின்னர் அதனை வெளியிட எடுத்துக்கொண்ட காலம்தான் இத்துணை ஆண்டுகள். இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கிய நீதித்துறைதான் இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் தூண் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

எனக்கு நீதி முறை சம்பந்தமாக நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு சந்தேகம்.

ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்போர் தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதி என்பதனை கருத்தில் கொள்ளவதில்லை.

இப்போ கொஞ்ச காலமாய் இருக்கும் சந்தேகம்.

நம்ம கர்நாடக தலைவலி தலைமை நீதிபதி தினகரன் ஐயாவுக்கு நீதி எப்போங்க கிடைக்கும்.

..........................................................................................................................................................................

அட விடுங்க தீர்ப்புதான் வந்துடுச்சே அப்புறமா என்னாச்சுன்னு பார்ப்போம்.

வழக்கின் தீர்ப்பு வந்து ஒரு வாரம் நல்ல நாடகம் நடைபெற்றது. எல்லா மந்திரிகளும் கூட்டம் போட்டுக் கொண்டே இருந்தார்கள் அட அதுதான்யா மீட்டிங்கு. எவ்வளவோ பணமெல்லாம் கோடிக்கணக்கில் ஒதுக்கீடு பண்ணியிருக்காங்க. எவ்வளவு பணம்னு பார்த்தா பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் ஒரு கடலை மிட்டாயும் கூட ஒரு தேங்காய் பர்பிக்கும் போதும்.

இங்க இன்னும் ஒரு மனுஷன் கூடவா எங்கயும் பாக்கி இல்லை.

த்தூ.. நாசமாய்ப் போகட்டும் இந்த இந்திய வல்லரசும் அதன் மக்களாட்சியும்.

@@@@@@@@@@@@@@@@@@@.

நான்காம் தூண என்று அவர்களே சொல்லிக் கொள்வதால் அதனைப் பற்றி குறிப்பிடுவதும் குறிப்பிடாமல் போவதும் ஒன்றும் பெரிய விடமில்லை என்பதால் அதனை தனியாக இணைத்துள்ளேன்.

நான்காம் தூணாம் பத்திரிகைத் துறை.

நான்காம் தூண் என்று அவர்களே சொல்லிக்கொள்கிற பத்திரிகை துறையைப் பற்றி அதிகம் விமர்சிக்க முடிவதில்லை. அது பற்றி மற்ற செய்திகளை விடவும் முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் தோல்வியடைந்த திரைப்படங்கள் முதல் நடிகைகளின் உடல்நலம் வரையான அத்துணை பிரச்சினைகளுக்கும் நடுவில் சில நல்ல பத்திரிகைகள் இந்த தீர்ப்பு குறித்தும் பேசின என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இவை யாவும் இவ்வழக்கின் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு மாற்றம் செய்யப்பட்ட போது என்ன செய்தன என்று அறியுமளவுக்கு நான் அப்போது இல்லை என்பதால் நான் அந்த விடயத்தை விட்டு விடுகிறேன்.

-மனிதன்

பி.கு: இக்கட்டுரையை எழுதி இந்த போபால் தளத்திற்காக அனுப்பிய நண்பர் மனிதமுள்ள "மனிதன்" அவர்களுக்கு நன்றி.

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

0 comments
கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

ஆக்-15 முற்றுகை

ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,

பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.

பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.

அனைவரும் வருக‌

இந்தியனின் உயிரின் விலை மூன்று ரூபாய் - கார்த்தி

3 comments

போபால் விடயத்தை முதலில் நான் எழுதிய பொழுது எனிடம் கேட்க பட்ட கேள்விகள் , "ஓட்டுனர் விபத்தை ஏற்ப்படுத்தினால் எப்படி வண்டிக்கு சொந்தக்காரரை கைது செய்ய முடியும் ", அதனால் அன்டேர்சன் குற்றமற்றவர் என்று விவாதம் .சரி அந்த விடயத்தை கொஞ்சம் விவரமாய் புரிந்து கொள்வோம் . மெத்தில் ஐசோ சயனைடு என்ற திரவம் வெளியில் லீக் ஆகி விஷ வாயுவை கக்கியது . இந்த மூல பொருளை வைத்து தான் "செவின்" என்ற பூச்சி கொல்லி மருந்து தயாரிக்க படுகிறது . ஐசோ சயனைடு விஷத்தை கக்கும் என்பதால் இதே பொருள் அமெரிக்காவில் வேறு ஒரு சூத்திரத்தில் அதவது மெத்தில் ஐசோ சயனைடு உபயோகப்படுத்தாமல் இதே மருந்தை தயார் செய்ய முடியும் . ஆனால் மெத்தில் ஐசோ சயனைடு செலவு கம்மி , அதிக லாப வெறி கொண்ட முதலாளியின் நோக்கம் தான் போபால் படுகொலை . முதலில் 1969 முதல் 1975 வரை இதற்க்கு அனுமதி மறுக்க பட்டுள்ளது ஏன் எனில் இது பழைய தொழிற்நுட்பம் மற்றும் இதன் மூலம் ஏற்படும் விபரீதங்களும் பயங்கரமாய் இருக்கும் என்பதால் முதலில் அமைச்சகம் இதற்க்குஎதிர்ப்பு தெரிவித்து உள்ளது , 1975 ஆண்டே அதற்க்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது .

மெத்தில் ஐசோ சயனைடை அதிகமாய் கலங்களில் சேர்த்து வைப்பது ஆபத்து , விபத்து நடந்த அன்று அதிகமாய் தான் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது . மேலும் ஒரு கலன் வெப்பம் கூடினால் மற்றொரு கலனுக்கு மாற்றி , அதன் வெப்பத்தை மட்டுப்படுத்த வேண்டும் , இந்த முறை தான் அமெரிக்காவில் இதே UNION CARBIDE நிறுவனத்தில் உள்ளது ஆனால் இந்தியாவில் அதற்க்கான வழி இல்லாமல் இருக்கிறது கட்டமைப்பு . மேலும் குளிரூட்டப்பட்ட
நிலையிலேயே இருக்க வேண்டும் ஆனால் செலவின் காரணமாய் குளிர்சாதனத்தை போடாமல் இருந்து இருக்கிறது நிர்வாகம் . இதை எல்லாம் செய்து விட்டு அன்டேர்சன் குற்றவாளி அல்ல தொழிலாளர்கள் செய்த தவறே காரணம் என்று கூச்சம் இல்லாமல் சொல்கிறார்கள் .

அமெரிக்காவில் நான்கு அடுக்கு பாதுகாப்பில் இருக்கும் தொழிற்சாலை இங்கே இல்லை அதே தொழிற்சாலை பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது முதலாளியின் லாப நோக்கத்திற்காக . அமெரிக்காவில் இதை போல் செய்து விட்டு சும்மா போக முடியுமா என்ன ???? பிரிட்டிஷ் பெற்றோலியம் இதை போல ஒரு விபத்துசெய்தது அமெரிக்காவில் இழப்பு என்னமோ கம்மி தான் 12 பேர் , சில மீன்கள் இறந்தன , அதற்க்கு 2000 கோடி டாலர்கள் நிவாரணம்
ஆனால் இங்கே இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் , லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் இங்கே இழப்பீடு இருபத்தி ஐந்து வருடத்திற்கு பிறகு 47 கோடி டாலர் , அதாவது அமெரிக்காவில் வாழும் கடல் நாய் , மற்றும் மீன்களை விட மனித உயிர்கள் மயிர்களை போன்றது என்கிற மனோபாவமே .

பாராளுமன்றத்தில் அணுசக்தி மசோதா ஒன்று வரப்போகிறது ,அதை போபால் விடயத்தின் பொழுது வந்தால் எதிர்ப்பு கிளம்பும் என்று தள்ளி வைத்து உள்ளனர் . அதன் சாராம்சம் எவ்வளவு தான் மக்கள் செத்தாலும் , இனிமேல் இதை போல விபத்து நடந்தால் முன்னூறு கூடி மட்டுமே இழப்பீடு தரவேண்டும் . அதாவது இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களின் உயிரின் விலை 300 கோடி , ஒரு உயிரின் விலை மூன்று ரூபாய். எவ்வளவு கொடுமை . அதாவது நீங்கள் என்ன வேண்டுமானாலும் அடியுங்கள் , எங்கள் முதுகு காத்து கிடக்கிறது , என்று இந்தியா முதுகை திரும்பி காண்பிக்கிறது , இது வெளி நாட்டில் இருக்கும்முதலாளிகளை ஈர்க்கும் என்கிறார்கள் . தனியார்மயம் , உலகமயம் என்று சொல்பவர்களின் மூஞ்சியில் சேர் , கரி பூசப்பட்டுள்ளது . அதாவது பல லட்சம் உயிர்களின் மதிப்பை விட ஒரு முதலாளியின் லாபம் முக்கியமானது என்கிறது .

மேலும் இதை போல ஒரு நிறுவனம் பேரழிவை ஏற்ப்படுத்தினால் 30 வருடம் வரை அந்த மக்களுக்கு நிறுவனமே பொறுப்பு , அந்த பொறுப்பை முப்பது முதல் பத்து வருடமாய் குறைக்கிறது மசோதா . சட்டங்கள் ஆளும் வர்கத்திற்க்கு , ஜனநாயகம் ஆளும் வர்கத்திற்க்கு . இன்று போபால் நாளை சென்னை அல்லது மதுரை ?????? பல போபல்கள் வெடித்து கொண்டிருக்கின்றன , போபால் உலகமயத்தின் trailor மட்டுமே , இன்னும் அதன் கொடுராமான படம் ஆரம்பிக்கவில்லை .

பி.கு: இது வெண்ணிற இரவுகள் கார்த்தி எழுதியது. இங்கே மீள்பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

விடத்தை கக்கிய சட்டம் போபால் - வெண்ணிற இரவுகள்

2 comments

இன்று காலையில் தேனீர் கடையில் செய்தித்தாளை புரட்டியவுடன் எனக்கு பேரதிர்ச்சி என்று சொன்னால் அது மிகை , நான் என்ன தீர்ப்பு வரும் என்று நினைத்தேனோ அதைபோலவே போபால் விடவாயு வழக்கில் நம் சட்டம் நடந்து கொண்டிருக்கிறது . நமக்கு சரி தவறு என்று விமர்சனம் செய்ய தகுதி இல்லை என்று வைத்துக்கொண்டாலும் பாதிக்கப்பட்டஅந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன என்பது கண்கூடாய் தெரிகிறது .

அதிலும் ஏழு பேருக்கு மட்டுமே தண்டனை இரண்டு ஆண்டுகள் , முதாலாளி வாரேன் அன்டேர்சன் சொகுசாய் உள்ளார் . அதுவும் அந்த தண்டனை பெற்ற குற்றவாளிகள் தொகை இருபத்தி ஐயாரிரம் கட்டிவிட்டு ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டார்களாம் . என்ன கொடுமை???? தீர்ப்பே இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து தான் என்றால் , என்ன கொடுமை .

இந்திய அரசு, அமெரிக்கா அண்டேர்சென்னை விசாரணைக்கு அனுமதிக்க வில்லை என்று சப்பை கட்டுகட்டுகிறது . ஆனால் காசாப் கூட பாகிஸ்தானை சேர்ந்தவன் தான் , அவன் வழக்கு என்றால் ஒரு ஆண்டில் தீர்ப்பு வரும் , தூக்கில் போடப்படுவான் ஏன் என்றால் அங்கு அவன் கலகம் செய்த இடம் முதலாளிகளின் கூடாரம் தாஜ் ஹோட்டல் ஓபராய் ஹோட்டல் போன்ற இடங்கள் . ஆனால் இங்கு போபால் விடயத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கபட்டாலும் இங்கு மாட்டிக்கொண்டது முதலாளி, சட்டம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது.

BSNL NETWORK வைத்து சுமார் 1500 கோடி ஏமாற்றிய அம்பானி வெறும் 90 லட்சம் அபராதம் கட்டிவிட்டு வெளியே வருவார்கள் , இதை 100 ரூபாய் திருடிய திருடன் ஐம்பது பைசா மட்டும் அபராதம் கட்டி அடிவாங்காமல் வெளியே வரமுடியுமா என்ன??? விட வாயு கொன்றதை விட , சட்டம் விடவாயுவை கக்கிகொண்டிருக்கிறது.

ஏன் அன்டேர்சன் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை , குறைந்தபட்ச தண்டனை கூட கொடுக்க முடியாதா ????? உங்கள் சட்டம் எல்லாம் பஸ்சில் டிக்கெட்எடுகாதவன் , பிக் பக்கெட் போன்ற இடங்களில் தான் செல்லுபடி ஆகுமா???????? ஏன் உங்கள் சட்டம் மேட்டுக்குடி மக்களிடம் செல்லுபடி ஆக வில்லை .

சரி போபால் விடயத்திற்கு வருவோம், 100 பேரை கொன்ற கசாப் தீவிரவாதி என்றால் , 1000 கணக்கில் கொன்ற இன்னும் கூட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் போபால் போன்ற இடத்தில் எப்படி இருக்க வேண்டும் தண்டனை . வெறும் ரெண்டு ஆண்டு தண்டனையாம் அதுவும் முதலாளி அன்டேர்சன் அவருக்கு கிடையாது , ஏன் என்றால் அவரை விசாரிக்க அமெரிக்க அனுமதிக்கவில்லையாம்.

அப்படி அனுமதிக்கவில்லை என்றால் உலகத்தின் முன் இந்திய ஊடகங்கள் இதை கவனத்திற்கு கொண்டு போய் சேர்த்து இருக்க வேண்டுமே . உலகமே அன்டேர்சன் எதிராய் குரல் கொடுக்க வைத்திருக்க வேண்டுமே . கசாப் விடயத்தில் வீரத்தை காட்டிய ஊடகங்கள் இதில் ஏன் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை .

ஏன் என்றால் இவர்கள் நோக்கமே முதலாளியை காப்பாற்றுவது . முதலாளிக்கு ஓபராய் ஹோடேலில் தீங்கு நேர்ந்தால் உலகத்தின் முன் தீவிரவாதம் என்று கூச்சலிடு . ஆனால் போபாலில் செத்து இருப்பது வெறும் பத்தாயிரம் பேர் தானாம் அதுவும் சாமானியர்கள் , போய் சாகட்டும் , அன்டேர்சன் பாதுக்காபாய் இருக்கிறாரா என்று பாதுகாக்கிறது சட்டம் . இந்திய அரசு அவரை விசாரணைக்கு கூப்பிட்டு இருக்காது என்பதே உண்மை ,மனித உயிர் என்பது முதலாளிகளின் எச்சமா ????? பணம் உள்ளவனே வாழ தகுதி உள்ளவனா????

-வெண்ணிற இரவுகள்

பி.கு: இது வெண்ணிற இரவுகள் தளத்தில் 07-ஜீன்-2010 அன்று வெளி வந்தது.

போபால் - மறக்கக் கூடாத துரோகம் --- தீபா

4 comments

குழந்தையை அணைத்துக் கொண்டு படுக்கும் போதெல்லாம் மூடிய கண்களுக்குள் இந்தக் காட்சி வருகிறது.


போபால் - தாமதமாகும் நீதி அநீதி என்பார்கள்.

"நாங்கள் முப்பது கோடிப் பேர்களும் நாய்களோ பன்றிச் சேய்களோ" என்று கேட்டான் பாரதி. நூறு கோடியைத் தாண்டிய பின்பும் இந்நிலை தான் தொடர்கிறதென்றால் நெஞ்சம் கொதிக்கிறது.

அதுவும் வெள்ளைக்காரர்களல்ல; நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அதிகார வர்ககமே மக்களை வெள்ளை எலிகளாகப் பயன்படுத்திக் கொள்ளச் சம்மதித்திருக்கிறதென்றால் இது என்ன ஜனநாயகம்?

உணவில்லை, உடையில்லை, அடிப்படைத் தேவைகள் எதுவும் இல்லை; உயிர் வாழ அனுமதியும் பறிக்கப் படுகிறது இந்தச் சபிக்கப்பட்ட தேசத்தில். தொடர்ந்து பல சந்ததிகளுக்கு!

ஆம், போபால் கொடூரம் அன்று மடிந்த மக்களோடு முடிந்து விடவில்லை. நிலத்தடி நீரையும் காற்றையும் பெண்கள் கருப்பைகளையும் சந்ததி சந்ததியாய்த் தாக்கி வரும் அக்கிரமத்தை என்ன சொல்வது?

போர், ஆதிக்கம் என்று வந்த நாடுகள் கூட நம் நாட்டில் இத்தகைய கொடுமையை நிகழ்த்தியதாக நான் அறிந்ததில்லை. வாணிபம் செய்ய வந்த பேடி ஒருவன் நம் சொந்த சகோதரர்களின், அப்பாவி எளிய இன்னுயிர்களைக் கூறு போட்டுக் குதறிச் சென்றிருக்கிறான்.

அப்படுபாதகமான செயலைப் புரிந்தவனுக்குத் தங்கத் தட்டில் மரியாதை வைத்து உயிர்ப்பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது.
இப்போது கவன்க்குறைவு என்ற ஒரே காரணத்தைக் காட்டி இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

இன்றளவும் சுகபோகமான வாழ்வு வாழ்ந்து வரும் வாய்ப்பையும் அவன் சிறிதும் இழக்கவில்லை. ஏன்? அவன் அமெரிக்காக்காரன். காசு போடும் முதலாளி.
சீ சீ, காசுக்காகப் பெண்டு பிள்ளைகளை விற்கும் புரோக்கர்கள் கூட இந்த அரசியல் வாதிகளை விட மேலானவர்களாகத் தெரிகிறார்களே.

அதுவும் இது விபத்து அல்ல திட்டமிட்ட படுகொலை என்பதை ஆதாரங்களுடன் அறியும் போது...ஐயோ!


உலகெங்கும் பல இயக்கங்கள் போபாலில் இறந்த மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் சொந்த தேசத்தில் இப்படிப் பட்ட துரோகம் நிகழ்ந்திருக்கிறது. இம்மண்ணில் பிறந்ததற்காக அவமானப் படும் சூழல் கூட வருமென்று நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் போபால் விஷயத்தில் இது உண்மையாகிறது.

தயவு செய்து இந்த மின்னிதழைப்
படியுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மால் குறைந்தபட்சம் செய்யக் கூடியது விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே. அதைச் செய்யத் தவற வேண்டாம்.

மேலும் படிக்க:
- தீபா

பி.கு: இது தீபா அவர்கள் அவர்களின் சிதறல்கள் தளத்தில் எழுதியது. அவரின் அனுமதியோடு இங்கு மீள்பதிவு செய்திருக்கிறோம்.

முடியாத ஒரு பெருந்துயரத்தின் கதை - எஸ்.வி.வேணுகோபாலன்

8 comments

கண்ணெல்லாம் எரியுதம்மா
கண்ணெல்லாம் எரியுதம்மா

உறக்கம் பிடிக்காமல்
புரண்ட சிறுவன்
இப்போது தாயை எழுப்பாமல்
தானாகத் தூங்குகிறான்

தூங்க மறுத்துத்
தூளியை உதைத்துத்
துடித்துக் கதறிய
பச்சிளம் குழந்தை
இப்போது நிம்மதியாகத் தூங்குகிறது

அந்தப் பாழிரவில்
நகரத்தின் தெருக்களெங்கும்
காலன் புகுந்து சென்றான்
முகமூடி கொள்ளைக்காரனைப் போல

ஊரைப் பிளப்பது போல
ஓலம் கிளம்பியது
தேவாலயத்து மணிகள்
விரிசல்கள் கண்டன

விதேசி மூலதனத்தின்
இரசாயனக் கிரியையால்
பால் வடியும் நிலவெல்லாம்
சீழ் வடிந்தது
போபால் தெருக்களெங்கும்
பிணங்கள் பிசுபிசுத்தன

இத்தனைக்கும் அசையாது
கால் சுருட்டி நிற்கிற
கருப்புச் சிலந்தியைப் போல்
அந்தத் தொழிற்சாலை
நகரத்தின் ஒரு புறத்தில்........

- பிரளயன் (சந்தேகி கவிதைத் தொகுப்பு - ஜூன் 1990)

கருப்புச் சிலந்தியைப் போல் நின்ற அந்தத் தொழிற்சாலை இன்றும் போபால் நகரத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறது. யூனியன் கார்பைடு இரசாயனத் தொழிற்சாலை. டிசம்பர் 2, 1984 நள்ளிரவைக் கடந்து 3ம் தேதியின் குளிர்கால விடியலுக்குச் சிலமணி நேரத்துக்கு முந்தைய அந்த நேரத்தில் நடந்த மீத்தைல் ஐசோ சயனேட் என்கிற விஷவாயுக் கசிவு பயங்கரம், உறங்கிக் கிடந்த அப்பாவி உயிர்களை நொடி நேரத்தில் ஆயிரக்கணக்கில் விழுங்கிவிட்டது. லட்சக் கணக்கானோரைச் செயலிழக்கச் செய்துவிட்டது. கால்நடைகளும், பிற ஜீவராசிகளும் கூடத் தப்பவில்லை.

அன்றோடு முடிந்துவிடவுமில்லை - உயிர்களுக்கு எதிரான அந்தத் தாக்குதல். உடனடியாக இறந்த சில ஆயிரம் பேர் 'கொடுத்து வைத்தவர்கள்' என்று நினைக்கும் அளவிற்குக் கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டனர் உயிரிருந்தாலும் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்தவர்கள். இந்த டிசம்பர் 3ம் தேதி வந்தால் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிடப் போகிற அந்தக் கொடிய விபத்தினால் (அது விபத்தா, இரசாயனப் போர் ஆயுதம் ஒன்றின் பரிசோதனையா என்ற கேள்விகள் அப்போதிருந்தே எழுப்பப்பட்டு வருகின்றன என்பது ஒருபுறம் இருக்க) பாதிக்கப்பட்டோருக்கான முழு நிவாரணம் இன்னமும் அவர்களை எட்டாதிருப்பதும், அராஜக நிகழ்வுக்குப் பொறுப்பான பெரும்புள்யூ௨ள் இன்னமும் தண்டிக்கப்படாததுமான உண்மைதான் நம்மைச் சுடுவது.

இந்தியாவின் ஹிரோசிமாவாக வருணிக்கத்தக்க அளவிற்கு, மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபால் இந்த இரசாயன வாயுவிபத்திற்கு அடுத்த சில மணிநேரங்களிலிருந்து பரிதாபமான நிலைக்கு மாற்றப்பட்டது. போபால் நகரத்தின் மொத்தமுள்ள 56 வார்டுகளில் 36 வார்டுகள் பாதிக்கப்பட்டன. அதில் இருந்த 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாக அரசுதரப்பில் பதிவான விவரங்களே சொல்கின்றன. மாநகரத்தின் ஏழை மக்கள் வடக்கே வசித்துவந்த ஒதுக்குப்புறப் பகுதியில்தான் நிறுவப்பட்டிருந்த இந்த இராட்சத தொழிற்சாலை. அங்கே என்ன தயாரிக்கப்படுகிறது, என்ன அபாயமான சூழல் அது, கொஞ்சம் அசந்தாலும் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது எதுவும் அறிந்திராத ஏழை மக்கள். போபால் நகரில் 1981 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் வெறும் 34 சதவீதமே. இதுவும் பெண்களுக்கு 19 சதவீதமாக இருந்தது. வெளியிடங்களிலிருந்து புலம்பெயர்ந்து வேலை தேடி வந்த மக்களும் சேர்ந்து வாழ்ந்த அந்தப் பூமியின் மேற்பரப்பில் படிந்த இரத்தக் கறையும், குவிந்த மண்டையோடுகளும் என்றும் வேதனைக்குரியவை.

பூச்சிக்கொல்லி தயாரிக்க நிறுவப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் தொட்டிகளில் ஒன்றிலிருந்து கசிந்த விஷவாயுவின் அளவு 40 டன்கள் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஆலைக்குள் 1981ல் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி மரணமடைந்திருந்த போதிலும், அதற்குப் பின்னரும் வெவ்வேறு விதமான சிறு பிரச்சனைகளும், விபத்துகளும் நடைபெற்றிருந்த போதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப் படவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த பாதுகாப்பு அம்சங்களின் தரமும் தாழ்த்தப்பட்டிருந்தது. விஷ வாயு கசிவின் நெடியை மூக்கு நுகர்ந்த அடுத்த நொடியே அது நுரையீரலை எட்டித் தனது கைவரிசையைக் காட்டிவிடும் என்றிருக்க, சிறிய ஈரத்துணியால் மூக்கை மூடிக்கொண்டு அதிவேகமாக அந்தப் பகுதியை விட்டே ஓடியிருந்தால் ஒருவேளை அதிக பாதிப்பிலிருந்து தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படை அறிவியல் ஆலோசனை கூட அறிந்திராத மக்கள் பகுதியில் தான் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. அதுவும், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நள்ளிரவைக் கடந்த வேதனை மிக்க நேரத்தில்....

நிலைமையின் தீவிரமறிந்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவிற்கு வந்ததும், மத்திய அரசு தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில் அவர் உடனே கைது செய்யப்பட்டார். ஆனால் அது வெறும் நாடகம் என்பது, உடனடியாக அவருக்கு எதிர்ப்பின்றி ஜாமீன் வழங்கப்பட்டதும், அடுத்த நொடியே தனி விமானமொன்றில் அவர் அமெரிக்காவிற்குத் தப்பி ஓடி ஒளிந்ததும், பின்னர் பல்லாண்டுகள் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒருபோதும் அவர் ஆஜர் ஆகாமல் நழுவிக் கொண்டிருந்ததும், அவரை இந்தியாவிற்குக் கொண்டுவர பிரத்தியேக நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றமே வழங்கிய சிறப்பு உத்தரவை அமலாக்க இந்தியப் புலனாய்வுத் துறையோ, மத்திய அரசோ இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதிருப்பதுமான பல நிகழ்வுகளிலிருந்து வெளிப்பட்டது. ஆண்டர்சன் மட்டுமல்ல, இவ்வளவு படுபயங்கரமான ஒரு சம்பவத்திற்குப் பொறுப்பானவர் என்று ஒற்றை ஆள் கூட அடையாளம் காணப்படவோ, விசாரணைக்கு உட்படுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகும்.

அமெரிக்காவின் பணவெறி பிடித்த வழக்கறிஞர்கள் பலர் போபால் நகரத்திற்கு வந்திறங்கி அப்பாவி மக்களுக்கு நிவாரணம பெற்றுத்தரும் ஆசைகாட்டிக் கொண்டிருந்த அதே வேளையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடுத்திருந்த வழக்கில், இந்தியாவின் மிக பிரபல வழக்கறிஞரான நானி பால்கிவாலாவைத் தனக்குச் சாதகமாக வாதாட நியமித்திருந்தது யூனியன் கார்பைடு. மிக உயர்ந்த மனிதர்களாகச் சமூகத்தில் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் இத்தகைய பல நபர்களுக்கு, தேச பக்தியைவிடவும் தொழில்பக்தியும், காசு பக்தியுமே விஞ்சி நிற்கும் என்பது மீண்டும் நிரூபணமானது. முகம் தெரியாத, பெயர் அறியப்படாத ஏழை எளிய மக்களின் உயிரும், உடல் ஊனமும் அமெரிக்க நீதிமன்றத்தில் பேசப்படக் கூடாதது, வழக்குக்கு அங்கு இடமில்லை என்று இந்திய அறிவுஜீவியையே பேச வைத்தது அந்நிய கம்பெனியின் பணபலம்.

அதுமட்டுமல்ல, லாபவெறியும், இரத்தவெறியுமிக்க இந்த நிறுவனத்தின் சார்பில் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட பெரும்பொய்கள் சாதாரணமானவை அல்ல. விஷவாயு கசிந்தது சீக்கிய தீவிரவாதிகளின் வேலை (அக்டோபர் 1984 இறுதியில் தான் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பதைப் பயன்படுத்தி !) என்றது. எங்கள் நிறுவனமே அல்ல, அது இந்தியக் கம்பெனி, இந்தியத் தொழிலாளர்களால் மோசமாகக் கட்டப்பட்டிருந்தது என்றது. சட்டப்படியாக, பன்னாட்டு நிறுவனம் என்ற ஒரு வரையறையே எங்கும் செய்யப்படவில்லை என்று கூசாமல் சொல்லுமளவு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயன்ற அதன் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டன.

ஆனாலுமென்ன, 3000 கோடி டாலர் கேட்டதற்கு வெறும் 47 கோடி டாலர் நஷ்ட ஈடுதான் விதிக்கப்பட்டது. இதன் நடுவே, நயவஞ்சகன் ஆண்டர்சன் 1986ல் பணி ஓய்வு பெற்றார். நிறுவனத்தை டவ் கெமிகல்ஸ் என்ற வேறு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். டவ் கெமிகல்ஸ் எங்களுக்கு எதுவும் தொடர்பில்லை என்று சாதிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்குள் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. உயிர்பிழைத்து பாதிப்புற்றிருப்போர் போராட்டக் குழுக்கள், முக்கியமாக பெண்கள் போராட்டக் குழு உதயமாயின. இந்த அமைப்புகளின் போர்க்குரலும், தீர்மானமான போராட்டமும் இதுவரை தேசம் சந்திக்காதது. எங்கே சென்றாலும், அநீதி இழைத்தவனைத் துரத்திப் பிடிப்போம் என்று அமெரிக்காவரை சென்ற இந்தக் குழுவின் தலைவியர் பெரிய கல்வியறிவோ, செல்வமோ படைத்தவர்களே அல்லர்.

இதில் முக்கியமாக அறியப்படும் இரட்டையர், ரஷிதா பீ - சம்பக் தேவி சுக்லா என்கிற இஸ்லாமிய-இந்து பெண்மணிகளாவர். மத பேதங்களை மீறி இலட்சிய வெறியோடு பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க இவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் அளப்பரியவை. டவ் கெமிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் வாசலில் தர்ணா நடத்த அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றவர்கள். 'துடைப்பக்கட்டையால் அடிப்போம் வாருங்கள்' (ஜாடு சே மாரோ) என்ற இயக்கத்தின் பெயரால், போபாலில் துவங்கி புது தில்லி வரை எத்தனையோ கிராமங்களுக்குச் சென்று சாதாரண மக்களிடமிருந்து துடைப்பங்களைத் திரட்டிக் கொண்டு போய்ப் போராட்டம் நடத்திவந்த இவர்களுக்கு 2004ம் ஆண்டின் கோல்டுமேன் விருது (1990ல் கோல்டுமேன் தம்பதியரால் சுற்றுச்சூழல் இயக்கவீரர்களுக்காக நிறுவப்பட்ட விருது) வழங்கப்பட்டது.

ஆண்டர்சன் மற்றும் பொறுப்பான அதிகாரிகளை இந்தியாவிற்குக் கொணர்ந்து கிரிமினல் வழக்கு தொடரப்படவேண்டும், வாயுக்கசிவின் முழு உண்மைகள், பாதிப்பின் விளைவுகள் மக்களது தகவலுக்கு வெளியிடப்படவேண்டும், தொழிற்சாலை அதன் நச்சுக் கழிவுகளோடு உடனடியாக அகற்றப்படவேண்டும், பாதிப்புற்றோர் வாழ்வாதாரங்களுக்கு முழு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதுதான் போபால் விஷவாயுவின் பாதிப்பால் அல்லலுறுவோர் எழுப்பும் குரலாகும். பாதரசம், நிக்கல் போன்ற உலோகங்களும், வேறு பல நச்சு வேதியல் பொருள்களும் மண்ணிலும், உடலிலும், ஏன் - தாய்ப்பாலிலும் கூடக் கலந்துவிட்டிருப்பதன் பாதிப்புகள் சமூக ரீதியாகவே தலைமுறைகளைத் தாக்கிக் கொண்டிருக்கிற பயங்கரம்தான் போபால் நிகழ்வு. தொழிலுக்கும், லாபத்திற்கும் வேட்டைக்காடாக வளரும் நாடுகளைப் பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்தச் சமூகப் பொறுப்போ, தார்மீக மதிப்போ, அரசியல் ரீதியான கடிவாளமோ கிடையாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது அந்த பயங்கரம்.

'பொன்னார் வளநகரில் வேதாளம் சேர்ந்தது, வெள்ளெருக்கு பூத்தது, பாதாள மூலி படர்ந்தது, உழுமண்ணில், குடிநீரில், சுவாசத்தில், கர்ப்பத்தில் அனைத்திலுமே பாஷாணம், பாஷாணம்.....'. என்று அப்பாவி மக்களைக் கதறடித்துவிட்ட போபால் விஷவாயு கசிவின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு, இன்றைய உலகமய-தாராளமய சூழலில் எந்த எச்சரிக்கையும் கொள்ளாதிருக்கிற ஆட்சியாளர்களைப் பற்றிய கோபத்தையும், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு அஞ்சாதது என்ற விழிப்புணர்வையும் புதுப்பிக்கிறது

- எஸ்.வி.வேணுகோபாலன்

Copyright © போபால்