மக்களாட்சியின் உளுத்துப் போன தூண்கள்

ஒரு நிகழ்வின் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு என்பது ஏனைய சம்பவங்கள் எனில் கொண்டாட்டமாக இருந்திருக்கக் கூடும். அது சமயம் அது குறித்து பல அறிக்கைகள் வெளியிட்டு பற்பல கொண்ட்டாட நிகழ்வுகள் கூட அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு முடிந்த அளவு கூத்தடித்திருப்பார்கள். ஆனால் இந்நிகழ்வின் இருபத்தைந்து ஆண்டில் வெளிவந்த இவ்வழக்கின் தீர்ப்பானது இந்திய மக்களாட்சியைப் பீடித்த புற்றுநோய் முற்றிப்போனதன் மருத்துவ அறிக்கையாக வெளிப்பட்டது.

இது குறித்து யாரும் வேதனைப்பட்டதாகவோ அல்லது அதிகம் சிந்தித்ததாகவோ தெரியவில்லை. அப்படி செய்திருந்தால் மட்டுமே நமக்கெல்லாம் ஏமாற்றமாக இருந்திருக்கும். நல்லவேளை அரசியல் தலைவர்களும் அரசுயர் அதிகாரிகளும் இந்திய தேசத்தின் நீதித்துறையும் இந்தமுறை மக்களை ஏமாற்றவில்லை என்பது பெருமகிழ்ச்சியளிக்கக் கூடிய விடயமாகும்.

உண்மைதான் மக்களே நம்புங்கள் அவர்கள் உங்களை ஏமாற்றினார்களோ இல்லை ஏமாற்றவில்லையோ தெரியவில்லை ஆனால் பெருமுதலாளிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டார்கள் என்பது உண்மை.

இருபத்தைந்து ஆண்டுகள் நடந்த (படுத்துக்கிடந்த) ஒரு வழக்கின் அது என்னவென்றால் பல்லாயிரம் மக்களை நடுஇரவில் கவனக்குறைவால் மரணிக்கச்செய்ததும் மற்றும் சில லட்சம் மக்களை முடவோராக்கியும் அவர்களது அடுத்த தலைமுறைக்கும் அந்த அத்துணை கொடுமைகளையும் அனுபவிக்கத்தந்ததுமான ஒரு கொடூர குற்றத்தின் தண்டனை நிர்ணயிக்கப்பட்டது அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளும் சில ஆயிரம் அபராதமும். உடனே இயற்கை நீதியின் நியதிப்படி மேல்முறைய்யீட்டற்கு விண்ணப்பித்திருப்பதால் ஜாமீனில் வெளிவந்தார்கள்.

இவ்வழக்கில் இந்திய அரசியலமைப்பின் மூன்று தூண்கள் எவ்வாறு கடமையாற்றின என்றறிவது இந்திய மக்களாட்சியின் உளுத்துப் போன தூண்களின் உண்மை நிலையை அறியலாம்.

முதல் தூணாம் அரசு

அரசு என்பது ஆரம்ப கால குழு முறை அரசிலிருந்து மன்னராட்சி கண்டு இப்போதிருக்கும் மக்களாட்சியாக பரிணமிக்க எடுத்துக் கொண்ட காலம் கொஞ்சமல்ல. கடந்து வந்த பாதையும் இனிய எளிய பாதையல்ல. இத்துணை காலகட்டங்களிலும் நடந்து வந்த அத்துணை முறைகளிலும் ஆகச்சிறந்த அரசியல் முறையானது இந்த மக்களாட்சி முறைதான்.

மக்களாட்சியின் தத்துவம்தான் படிக்க கேட்க என்ன இனிதாக இருக்கிறது

மக்களே மக்களால் மக்களுக்காக.

இப்பேர்பட்ட மக்களாட்சி நிலவும் இந்தியாவில் அரசானது மத்திய அரசு மாநில அரசு என்ற இரு பிரிவுகளில் வருகிறது.

மாநில அரசு

இன்னும் உயிருடன் உள்ள அன்றைய மாநில முதலமைச்சருக்கு இந்த பத்திரிக்கைகாரர்களின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய இக்கட்டான நிலையில் என்ன சொல்வது என்று தெளிவாகச் சொல்லாமல் விட்டு விட அவர் பாவம் சில நாட்களாக எங்கோ போய் சாதாரண திருடனாட்டம் ஒளிந்து கொள்ள வேண்டி வந்தது பாருங்கள் பாவம் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. நல்ல வேலை யாரும் ஆள் கொணர்விப்பு மனு போடும் முன்னர் கண்டு பிடித்து வெளிச் சொல்ல வந்து விட்டார். இறந்து போன நரசிம்ம ராவ் (யாருக்கு மகனெல்லாம் அரசியல்ல பெரிய ஆளா வளரலையோ) அவர்தான் காரணமாம். ஆண்டர்சன் என்ற நல்ல பாம்புக்கு விடம் ரொம்ப அதிகம் பாருங்க அதனை அடிக்கத்தான் முடியல. அதனால அதுகிட்ட இருந்து மக்களை காப்பாற்றத்தான் அவனை அமெரிக்கா அனுப்பி விட்டுட்டோம்னு சொல்லாம விட்டாரு பாருங்க அதுவரைக்கும் சந்தோசம்.

நான் பல சமயம் எண்ணியதுண்டு. தி மு க வினரைப்போல படித்த கொள்கை வழி வந்த தனது மகனுக்கு ரசிய கம்யூனிஸ பெருந்தலைவரின் பெயரைச் சூட்டிய அரசியலமைப்பில் திருத்தம் வேண்டி கமிட்டி அமைத்து மத்திய அரசுக்கே பரிந்துரையை அனுப்பிய இன்னமும் மாநில சுயாட்சி வேண்டி கடிதம் எழுதும் தலைவரே அந்நிய நாட்டின் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பத்தில் மற்றைய மாநிலங்களுக்கு உதாரண புருஷனாக மாறிப்போகையில் மக்களாட்சித் தத்துவத்தில் வரும் மக்களுக்கு என்பதனை அதன் தலைவர் செந்தமிழ் கொண்டு மிகச்சரியாக உணர்ந்து ஆட்சி புரியும் போது மத்திய அரசின் கைக்கூலியாக அவர்களின் தயவிலும் கடைக்கண் கருணையிலும் ஆண்டு கொண்டிருந்த அதே கட்சியின் மாநிலப் பிரிவை என்னவென்று நொந்துகொள்வது.

எனவே முதுகெழும்பில்லாத மாநில அரசைப்பற்றி எவ்வளவுதான் திட்டுவது எழுதுவது.

மத்திய அரசு

இன்றைய புதிய பொருளாதார கொள்கை என்றும் தாரளமயமாக்கல் என்றும் திறந்த சந்தைப் பொருளாதாரம்என்றும் சொல்லப்படுகிற பெரும் முதலாளிகளுக்கு குடை பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் 1991ல் அறிமுகப்படுத்தப் பட்டதாக அறிந்தாலும் டாட்டா போன்ற பெரும் முதலாளிகளையே அதற்கு முன்னர் அரசுடமையாக்கல் மற்றும் இன்னபிற அரசு கொள்கைகள் மூலம் திறரடித்ததாகவும், இன்று தனது தேவைகளுக்கேற்ப அரசுகளையும் அரசு நிர்வாகத்தையும் வளைக்கும் ரிலையன்ஸ் நிறுவனமே புதிய பொருளாதார கொள்கைகள் வரும் வரையில் பற்பல அரசு விதிமுறைகளை சட்ட விரோதமாக மீறியும் உடைத்தும் அரசின் உயர் அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் சரியான முறையில் கவனித்தும் இருந்து வந்ததாக கேள்விப்பட்ட வகையில் ஏனைய்யா இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு அமெரிக்க முதலாளியை கேள்வி கேட்க வக்கில்லாமல் விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து விருந்து சாப்பாடு போட்டு மாநில முதல்வரின் சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தது ( இலவசமாய்த்தானா இல்லை அதற்கும் ஏதாவது தனியாக கமிசன் கிடைத்ததா ? ) என்று கேள்வி கேட்போருக்கு ஏன் அவர்களால் உண்மையைச் சொல்ல முடியவில்லை என்று புரியவில்லை.

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். உண்மை இதுதான்.

சாவு நமது வீட்டில் என்பதற்காக வந்த விருந்தாளிக்கு நமது கஷ்டத்தை காட்ட முடியுமா என்ன ? அதனால்தான் நமக்கு மட்டுமே உரித்தானதாக நாம் சொந்தம் கொண்டாடி வரும் விருந்தோம்பலை அப்போதும் அவ்வளவு ஆயிரம் இழவுகள் விழுந்த வேளையிலும் காட்டியது இந்திய அரசு.

எனவே மத்திய அரசின் விருந்தோம்பல் கொள்கையை அறியாது பேசும் மக்கள் யாவரும் மன்னிப்பு கேட்டுக்கொள்ள சமயம் வாங்கித்தரும்மாறு யாராவது எல்லாம் கொள்ளையடித்த பெரியவரை அழைக்கிறேன்.

இந்திய தேசியத்திற்காக போராடி உயிர் விட்ட எழுபத்தைந்து மத்திய ரிசர்வ் காவல் படையின் வீரர்கள் உயிருக்கு போராடிக் கிடந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்யவா நமக்கு விமானமும் ஹெலிகாப்டரும். எதாவது ஒரு பெரு முதலாளியின் நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு பொதுமக்களின் கோபத்தால எவ்வித இழப்பும் ஏற்பட்டு விடாமல் காக்க எப்போதும் அவை காத்திருப்பில் இருக்க வேண்டியது அவசியம் என்ற கொள்கை வகுத்த தலைவர்கள் நமது விருந்தோம்பலை உலகறியச் செய்யும் நடவடிக்கைகளுக்கு தோழர்கள் யாவரும் தோள் கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

மற்றொரு தூணாம் அரசாங்கம்

அரசாங்கத்தைப் பற்றி என்ன சொல்வது. அரசும் நானே அரசாங்கமும் நானே என்று எல்லா துறைகளையும் மந்திரி பதவி கொடுத்து அவங்க கையிலயே வைத்துக் கொண்ட பிறகு அதனை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை.

இருந்தாலும் பாருங்கள் இன்னும் இந்த ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகள் தான் உண்மையிலேயே நாட்டை ஆள்கிறார்கள் என்பது கிட்டத்தட்ட உண்மையே. எந்த அரசியல்வாதிக்கும் திட்டங்களை வாகுத்துக் கொடுப்பதும் எந்த சட்டத்தையும் வரைவு செய்வதும் மற்றும் சட்டவடிவு பெற்ற பின்னர் அவற்றை நடைமுறைப் படுத்துவதும் எல்லாமே இவர்கள்தான். (ஆனால் இறுதியாக எல்லாவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை நமது மந்திரிகள் கையில் வைத்திருபதால் இவர்களும் கொள்ளையில் தனியாக ஈடுபட முடியாமல் இந்த வீணாய்ப்போன ஒன்றும் தெரியாத அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் பெரும் பங்கு சம்பாரித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது தனி சோகக் கதை.)

ராகுல் காந்தி தனது மொபைலை விமான நிலையத்தில் தவற விட உடனே அரசாங்கம் அதானுங்க அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை அரசு அதிகாரிகளின் செயல்திறனுக்கே ஒரு உதாரணம்..

அதேபோல பாருங்களேன் அவர்கள் போபால் சம்பவத்தில் என்ன அசுர வேகத்தில் நடவடிக்கை எடுத்தார்கள் என்று

சம்பவம் நடந்தது. 02.12.1984

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 01.12.1987

வெகு விரைவாக மூன்றே நாட்களில் வருடங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த மத்திய புலனாய்வுத்துறையினருக்கு (சி பி ஐ - C B I)யாரேனும் ஒரு பாராட்டு விழாவேனும் நடத்தியிருப்பார்களா இந்த நன்றி கெட்ட போபால் மக்கள். அதனாலேயே உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் 13.09.1996 இல் வழக்கின் இந்திய தண்டனை பிரிவை மாற்றி குறைந்த தண்டனை அளிக்கும் பிரிவின் கீழ் விசாரிக்கும் படி சொல்ல சோர்ந்து போன சி பி ஐ ஆனது அதற்கு அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு மேல்முறையீடு ஏதும் செய்யாமல் விட்டுவிட்டது.

இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகு அரசியல் தலைவர்களின் கீழே வேலை செய்யும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம் கொடுத்து விடுகிறேன் பாருங்கள்.

முன்னாள் ஹரியானா டி.ஜி.பி எஸ்.பி.எஸ்.ரதோர் தனது அதிகாரத்தை அரசாங்க பதவியை எவ்வளவு உண்மையாக உபயோகம் செய்தார் என்றும் அதற்கு துணையாக ஹரியானா காவல்துறை எப்படியெல்லாம் நேர்மையாக செயல்பட்டது என தெரிந்து கொள்வீர்களேயானால் போதும் இந்திய அரசாங்கத்தின் அத்துணை செயல்பாடுகளும் உங்களுக்கு நொடியில் அத்துபடியாகி விடும்.

உண்மையிலேயே தெரியாதவர்கள் ruchika case அல்லது former hariyana DGP S.P.S Rathore என்று கூகுலாத்தாவிடம் தேடிப்பாருங்கள்.

. மூன்றாம் தூணாம் நீதித்துறை

பலரும் இன்று இந்த தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். உண்மையில் விமர்சிக்க வேண்டிய விசயம் இவ்வழக்கின் முக்கிய திருப்பமான இவ்வழக்கினை இந்திய தண்டனை சட்டம் பிரிவு கொலைக்குற்றமல்லாத மரணம் வேண்டியதில்லை குற்றமுறு கவனக்குறைவு (criminal negligence) என்ற பிரிவின் கீழ் விசாரித்தால் போதும் என்ற உச்ச நீதிமன்றத்தின் முடிவைத்தான்.

இப்போது அளிக்கப்பட்ட தீர்ப்புதான் பதிவு செய்யப்பட பிரிவுகளின் கீழ் வழங்கப்படக் கூடிய அதிகபட்சம். இத் தன்டனையை இவ்வழக்கு பதியப்பட்டபின் அதிகரித்திருந்தாலும் அது அந்த வழக்குக்கு பொருந்தாது. (உள்ளதைத்தாணுங்க சொல்லறேன்). எனில் இந்த தீர்ப்பை விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது. உண்மை அன்றே அவ்வழக்கின் முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதன்பின்னர் அதனை வெளியிட எடுத்துக்கொண்ட காலம்தான் இத்துணை ஆண்டுகள். இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கிய நீதித்துறைதான் இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் தூண் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

எனக்கு நீதி முறை சம்பந்தமாக நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு சந்தேகம்.

ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்போர் தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதி என்பதனை கருத்தில் கொள்ளவதில்லை.

இப்போ கொஞ்ச காலமாய் இருக்கும் சந்தேகம்.

நம்ம கர்நாடக தலைவலி தலைமை நீதிபதி தினகரன் ஐயாவுக்கு நீதி எப்போங்க கிடைக்கும்.

..........................................................................................................................................................................

அட விடுங்க தீர்ப்புதான் வந்துடுச்சே அப்புறமா என்னாச்சுன்னு பார்ப்போம்.

வழக்கின் தீர்ப்பு வந்து ஒரு வாரம் நல்ல நாடகம் நடைபெற்றது. எல்லா மந்திரிகளும் கூட்டம் போட்டுக் கொண்டே இருந்தார்கள் அட அதுதான்யா மீட்டிங்கு. எவ்வளவோ பணமெல்லாம் கோடிக்கணக்கில் ஒதுக்கீடு பண்ணியிருக்காங்க. எவ்வளவு பணம்னு பார்த்தா பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் ஒரு கடலை மிட்டாயும் கூட ஒரு தேங்காய் பர்பிக்கும் போதும்.

இங்க இன்னும் ஒரு மனுஷன் கூடவா எங்கயும் பாக்கி இல்லை.

த்தூ.. நாசமாய்ப் போகட்டும் இந்த இந்திய வல்லரசும் அதன் மக்களாட்சியும்.

@@@@@@@@@@@@@@@@@@@.

நான்காம் தூண என்று அவர்களே சொல்லிக் கொள்வதால் அதனைப் பற்றி குறிப்பிடுவதும் குறிப்பிடாமல் போவதும் ஒன்றும் பெரிய விடமில்லை என்பதால் அதனை தனியாக இணைத்துள்ளேன்.

நான்காம் தூணாம் பத்திரிகைத் துறை.

நான்காம் தூண் என்று அவர்களே சொல்லிக்கொள்கிற பத்திரிகை துறையைப் பற்றி அதிகம் விமர்சிக்க முடிவதில்லை. அது பற்றி மற்ற செய்திகளை விடவும் முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் தோல்வியடைந்த திரைப்படங்கள் முதல் நடிகைகளின் உடல்நலம் வரையான அத்துணை பிரச்சினைகளுக்கும் நடுவில் சில நல்ல பத்திரிகைகள் இந்த தீர்ப்பு குறித்தும் பேசின என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இவை யாவும் இவ்வழக்கின் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு மாற்றம் செய்யப்பட்ட போது என்ன செய்தன என்று அறியுமளவுக்கு நான் அப்போது இல்லை என்பதால் நான் அந்த விடயத்தை விட்டு விடுகிறேன்.

-மனிதன்

பி.கு: இக்கட்டுரையை எழுதி இந்த போபால் தளத்திற்காக அனுப்பிய நண்பர் மனிதமுள்ள "மனிதன்" அவர்களுக்கு நன்றி.

2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

மனிதரின் பதிவு அருமை. நான்காவது தூணை சற்று பாராட்டியுள்ளமை அவரது நேர்மையை காட்டுகிறது.வலைப்பூக்களும் நான்காவது தூணில் அடக்கம் தானே !!!!

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு தோழர் புலவர் புலிகேசி !
உடல் மன நல குழப்பங்களால் இருத்தலுக்கே கடுமையாக கடந்த சில வாரங்களாக போராடி வருகின்றேன். உங்கள் அழைப்பை ஏற்று போபால் துயரம் குறித்த எனது கருத்தை எழுதி தராமைக்கு வருந்துகிறேன்;மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். பல்கலைகழகத்தில் சேர்ந்த பின்னர், போபால் குறித்த விழிப்புணர்வு அரங்கு ஒன்றை நண்பர்களுடன் ஏற்பாடு செய்து அந்நிகழ்வு பற்றிய பதிவை உங்களுக்கு கண்டிப்பாக அனுப்பி வைப்பேன் ... எனது மறுமொழியின்மை குறித்து கோபம் கொள்ள வேண்டாம் தோழர் ! உங்களது தொடர் முயற்சிகள் குறித்து எனக்கு பெரிதும் மகிழ்ச்சிகள் தோழர் !! வருகிறேன் ....

Post a Comment

Copyright © போபால்