இதுவா நமது தேசம்? - மாதவராஜ்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே, “இது பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக இல்லை” என ஒரு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கோபத்தோடு கருத்து தெரிவிக்குமளவுக்கு போபால் வழக்கில், அநீதி அப்பட்டமாய் தோலுரிந்து போயிருக்கிறது.. மிகப்பெரும் துயரங்களையும் காலம் ஆற்றிவிடும் என்பதும் பொய்யாகி இருக்கிறது. ‘இதுவும் கடந்து போகும்’ என்று சமாதானம் செய்ய முடியாமல் 26 ஆண்டுகள் கழித்தும், கொந்தளிக்கச் செய்கிறது. ஆறாத ரணங்களைக் கீறித் துடிக்க வைக்கிறது.

1984 டிசம்பர் இரண்டாம் நாள் குளிர் இரவில், இந்தியாவே துயில் கொண்டிருந்த நேரம், போபால் மரணத்தின் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தது. யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து நாற்பதாயிரம் கிலோவுக்கும் அதிகமான ‘டாக்சிக்’ வாயு கசிந்து, வெள்ளைப் புகை மண்டலமாய் விரிந்து, அயர்ந்து கிடந்த மனிதர்களுக்குள் நுழைய ஆரம்பித்தது.. தொண்டை காந்தலெடுக்க இரும ஆரம்பித்தவர்கள் உடலின் தசைத் துணுக்குகளெல்லாம் மிளகாயின் காந்தலெடுக்க துடித்துப் போனார்கள். கண்கள் எரிய, எங்கும் “ஐயோ, ஓடுங்கள், ஒடுங்கள் என கூப்பாடுகளும், இதயம் அறுந்து வெளியே வந்து விழுமாறு இருமல்களுமாய் கேட்டன. என்ன, ஏது என்று அறியாமல், இலக்கற்று ஓடியபடியே விழுந்தார்கள். மாடுகளும் கதறியபடி, மனிதர்களை முட்டித் தள்ளி ஓடின. யார், எங்கே என யோசிக்க முடியாமல் புத்தி பேதலிக்க, குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போயின. விடிந்த போது ஈசல் பூச்சிகளைப் போல நகரமெங்கும் மனித உடல்கள் அங்கங்கு கிடந்தன. இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோக, ஆறு லட்சத்துக்கும் மேலே மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயிருந்தனர். உலகமே விக்கித்துப் போனது.

இப்படியொரு பயங்கரம் நிகழக்கூடும் என பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. செப்டம்பர் 1982ல் ராஜ்குமார் கேஷ்வானி என்னும் பத்திரிக்கையாளர், “விழித்துக்கொள்ளுங்கள் போபால் மக்களே, நீங்கள் எரிமலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என யூனியன் கார்பைடின் ஆபத்து குறித்து விளக்கியிருந்தார். 1984 நவம்பர் கடைசி வாரம் வரைக்கும், இது குறித்து நான்கு கட்டுரைகள் எழுதியிருந்தார். விபத்து நடப்பதற்கு முன்னர் பலமுறை யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ‘பாதுகாப்பு நடவடிக்கைகள்’ குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இருபத்தைந்துக்கும் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அவைகளை சரிசெய்யத் தவறியதன் விளைவுதான் இந்த பேரிழப்புகள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு தடித்த பெரும் சட்ட புத்தகங்கள் தேவையில்லை. நேர்மையும், இதயசுத்தியும், குறைந்தபட்ச விஞ்ஞான அறிவுமே போதும். ஆனாலும் சாலை விபத்துக்குரிய லட்சணத்துடன் வழக்கு நடத்தப்பட்டு, ‘கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து’ என்ற தீர்ப்பாகி இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஏழு உயரதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ருபாய் (2000 டாலர்!) அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத முதலாளித்துவத் திமிரில் செய்யப்பட்ட படுகொலைகளுக்கும், பஞ்சமா பாதகத்திற்கும் கொடுக்கப்பட்ட தண்டனையாம் இது. இந்த தேசத்தையும், இந்த மண்ணையும் தங்கள் வீட்டு குப்பைத் தொட்டியாகக் கூட மதிக்காத அந்நிய, அமெரிக்க அயோக்கியர்களுக்கு வழங்கப்பட்ட அபராதமாம் இது! வாழிய பாரத மணித்திரு நாடு!

scalesofinjustice

கைது செய்யப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபரான் ஆண்டர்சனை அப்போது மாநிலத்திலும், மத்தியிலும் இருந்த காங்கிரஸ் அரசு யாருக்கும் தெரியாமல் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு, ’காணாமல் போனவராக’ அறிவித்து தங்கள் அமெரிக்க விசுவாசத்தைக் காப்பாறிக்கொண்டது. அப்படி அனுப்ப ஏற்பாடு செய்தவர் அப்போது மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த அர்ஜீன்சிங் என்றும், அதற்கான உத்தரவிட்டவர் ராஜீவ் காந்தி என்றும் இப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. சம்பந்தப்பட்ட விமான பைலட்டிலிருந்து, மாஜிஸ்டிரேட் வரை பலரது வாக்குமூலங்கள் பத்திரிகைகளில் வந்து கொண்டு இருக்கின்றன. ஆண்டர்சனை அரசு காப்பாற்றியது என முன்னாள் சி.பி.ஐ டைரக்டர் பி.ஆர்.பால் சொல்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்களை அதற்கே உரிய வரலாற்று குணத்தோடு வேகவேகமாக மறுத்து அறிக்கைகள் விடும் காங்கிரஸ் கட்சி, இந்த அநீதியான தீர்ப்பு குறித்து வாயைத் திறக்கவில்லை. மக்களைவிட, மகராஜாக்களே அவர்களுக்கு எப்போதும் முக்கியம்.

அந்த விஷக்காற்றின் உக்கிரத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் இப்போதும் பார்க்க முடிகிறது. அடுத்த தலைமுறைக்கும் அது தாவி இருப்பதை, குழந்தைகளிடம் தென்படுவதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். நிலத்தடி நீரும் பயன்படுத்த முடியாதபடி மோசமாகி இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை கிடைத்த நிவாரணம் என்பது தலா இருபத்தையாயிரம் மட்டுமே. அதுவும் இரண்டு தவணகளாக 1994 மற்றும் 2004ல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போபால் துயரத்தை எதிர்த்து ஒரு அமைப்பை நிறுவி இன்று வரை போராடி வருகிற ஜெயப்பிரகாஷ் இதனைச் சொல்லி இருக்கிறார். அதுவும் இறந்து போனவர்கள் வெறும் மூவாயிரம் என்ற கணக்கில் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த உணமைகளையும், புள்ளி விபரங்களையும் அறிய அறிய, இந்த அமைப்பின் கோரமுகமும், கொடூர குணமும் வெட்ட வெளிச்சமாகிறது.

நமது சட்டத்தில், இதுபோன்ற தவறுகளுக்கு criminal liability சுமத்தும் ஷரத்துக்கள் இல்லையெனவும், அதை சரிசெய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இந்தத் தீர்ப்பு குறித்து ஆராய்ந்திட அமெரிக்க் பக்தரும், பெருமுதலாளிகளின் விசிறியுமான ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைத்திருப்பதாகவும் சொல்லப்ப்படுகிறது. நீதிக்கு குழி தோண்டியாகிவிட்டது. இனி புதைக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான்!

இந்தத் தீர்ப்பு இன்னொன்றையும் சூட்சுமமாக தெரிவிக்கிறது. அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் குறித்த சட்ட வரையறைகளில் அரசின் நிலைபாடு குறித்த விளக்கம் இருக்கிறது. போபால் விஷக்காற்றை விடவும் பல நூறு மடங்கு ஆபத்து விளைவிக்கும் அணு உலைகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ‘கவனக்குறைவால்’ விபத்து ஏற்பட்டாலும், இதே தீர்ப்புதான் அந்த முதலாளிகளுக்கும் என தெளிவாக்குகிறது. தன் வீடு எரிந்து சாம்பலானாலும், அமெரிக்காவுக்கு குடைபிடிக்கும் இந்த அயோக்கியத்தனந்த்தை என்னவென்பது? “விழித்துக் கொள்ளுங்கள் மக்களே”- இதுதான் போபால் துயரமும், போபால் தீர்ப்பும் நம் அனைவருக்கும் சொல்லியிருக்கும் செய்தியும், எச்சரிக்கையும்..

இந்த பெருந்துயரத்திற்கும், பேரிழப்புகளுக்கும் காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தருவதும்தான் நேர்மையான அரசின் கடமையும் நெறியுமாகும். அந்த யோக்கியதை இதுவரை இருந்த எந்த மத்திய அரசுக்கும் இருக்கவில்லை. நீதி கிடைக்கும் வரை உக்கிரத்துடன் இயக்கங்களை நடத்த ஜனநாய்க சக்திகளும், சமூக ஆர்வலர்களும் முன் வரவேண்டும்! “மக்களின் கொந்தளிப்பும், ஆவேசமும் அதிகமாகியதால்தான், ஆண்டர்சனை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி ஆகியது” என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்போது சொல்கிறார். ஆம், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களும் இதே காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய ஒருநாள் வரவேண்டும்!

அப்போதுதான் இது நமது தேசமாக இருக்கும்!

- மாதவராஜ்

பி.கு: இது நண்பர் மாதவராஜ் 14-ஜீன்-2010 அன்று அவரது தீராத பக்கங்கள் வலைப்பூவில் எழுதியது. அவரது அனுமதியுடன் இங்கு மீள்பதிவிடப்பட்டிருக்கிறது.

8 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு புலிகேசி மாதவராஜ் போன்றவர்கள் சொன்னால் விடயம் மக்களுக்கு செல்லும் .முயற்சிக்கு பாராட்டுக்கள் .
போபால் என்றால் சரோஜா தேவி கோபால் என்று சொல்வது போல் உள்ளது என்று வக்கிர எண்ணத்துடன் பேசும் சிலர்
மத்தியில் உன் முயற்சி மிக்க மகிழ்ச்சி . மேலும் பல கட்டுரைகளை எதிர்ப்பார்க்கிறேன் . இந்த பதிவர்கள் ஏன் ஒரு பொது விடயத்திற்காக
கூட மாட்டேன் என்று தெரியவில்லை . வெட்கமாய் தான் இருக்கிறது பாலசீயை அழைத்தேன் கதிரை அழைத்தேன் அகல்விளக்கை அழைத்தேன்
யாரும் கேட்பதாய் தெரியவில்லை , இது எல்லாம் கேவலமாய் தான் உள்ளது . ஏதோ சங்கம் என்றெல்லாம் பேசினார்கள் , ஒரு பொது விடயதிர்க்காய்
கூட ஒன்று கூட மறுப்பது ஏனோ ????????? இன்னும் நிறைய பதிவர்களிடம் இருந்து நிறைய எதிர்ப்பார்க்கிறேன் .

Chitra said...

ஆம், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களும் இதே காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய ஒருநாள் வரவேண்டும்!

அப்போதுதான் இது நமது தேசமாக இருக்கும்!


......அரசியல் தலைவர்கள், தாங்கள் தன் குடும்பத்தின் நல பிரதிநிதிகள் அல்ல, தேச மக்களின் பிரதிநிதிகள் என்று உணர்ந்து கொண்டு, ஆவன செய்யும் காலம் என்று வரும்?

vinodh said...

//ஆம், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களும் இதே காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய ஒருநாள் வரவேண்டும்!//

இதில் சி பி எம்மும் இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. யூனியன் கார்பைடை வாங்கியுள்ள டௌ கெமிக்கள்ஸ் என்ற படுகொலை நிறுவனத்துக்காக நந்திகிராமில் துப்பாக்கி தூக்கி மக்களைக் கொன்றவர்கள்தான் சிபிஎம் கட்சியினர்.

இந்த அநியாயம் குறித்தும் மாதவராஜின் மௌனம் அர்த்தப்பூர்வமானது.

vinodh said...

//இதில் சி பி எம்மும் இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. யூனியன் கார்பைடை வாங்கியுள்ள டௌ கெமிக்கள்ஸ் என்ற படுகொலை நிறுவனத்துக்காக நந்திகிராமில் துப்பாக்கி தூக்கி மக்களைக் கொன்றவர்கள்தான் சிபிஎம் கட்சியினர்.

இந்த அநியாயம் குறித்தும் மாதவராஜின் மௌனம் அர்த்தப்பூர்வமானது. //

இது போன்ற எனது விமர்சனப் பின்னூட்டங்களை அனுமதிக்காத அளவுக்கு சனநாயகமானவர்தான் மாதவராஜ்.

அரைகிறுக்கன் said...

ஆளும் வர்க்கம் எப்போது ஒவ்வொரு குடிமகனின் கவலைக்கும் பதில் அளிக்கும் நிலைமை இங்கு இல்லாத போது அவர்கள் நினைப்பதே சட்ட வடிவு பெறுகையில் நாம் கத்துவதெல்லாம் அதிகார வர்க்கத்தின் கோட்டைக்குள் புகப்போவதில்லை. அப்படி ஒரு காலம் வரும் என நம்புவோமாக.

ஏகலைவன் said...

மாதவராஜிடமிருந்து இத்தகைய பதிவு வெளிவந்துள்ளது உண்மையிலேயே வியப்பையே ஏற்படுத்துகிறது!

என்னதான் உணர்ச்சிப்பெருக்கோடு மாதவராஜ் இக்கட்டுரையைப் புணைந்திருந்தாலும், போபால் மக்களுக்கு நீதி பெற்றுத்தருவதாக காங்கிரஸ்காரன் சவடால் அடிப்பதைப் போலதான் மாதவராஜின் இந்த பதிவும் இருக்கிறது.

ஏனெனில், மேலே பின்னூட்டமொன்றில் தோழர் வினோத் குறிப்பிட்டுளதைப் போல, யூனியன் கார்பைடின் தற்போதைய கொலைமுகமான டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்காக நந்திகிராம மக்களின் நிலங்கள் சூறையாடப்பட்டது. தங்களது நிலங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடிய நந்திகிராமத்து அப்பாவி விவசாயிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோரை, சி.பி.எம். அரசு போலீசை ஏவி கொன்றொழித்தது. நூற்றுக்கணக்கான உழைக்கும் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது சி.பி.எம். கட்சியின் குண்டர் கூட்டம்.

இப்படி நாம் சொன்னால் நண்பர் மாதவராஜ் கோபத்தில் பொங்கி வெடிப்பார். இவற்றுக்கு ஆதரமில்லாமல், சும்மா போகிற போக்கில் நான் இதனை இங்கு பதியவில்லை. நந்திகிராம துப்பாக்கிச் சூட்டு வெறியாட்டத்திற்குப் பிறகு உண்மைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட மக்கள் தீர்ப்பாயம் - முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் சொன்ன நேரடியான சாட்சியங்களிலிருந்துதான் நான் இதனை இங்கு பதிவிட்டுள்ளேன். அந்த மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரனை அறிக்கையின் தமிழாக்கத்தை கோவையைச் சேர்ந்த விடியல் பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறது.

சிபிஎம் கட்சியானது நக்சல்பாரி புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதில் காங்கிரசு, பாஜக வை விஞ்சி நிற்கிறது. வன்முறையற்ற அமைதி வழியே (அதாவது காந்திய வழியே...) தமது அரசியல் என்று பிரகடனப்படுத்திவருகிறது.

ஆனால், டௌ கெமிக்கல்சுக்காக நந்திகிராமிலும், டாட்டாவுக்காக சிங்கூரிலும், ஜிண்டாலுக்காக லால்கார் பழங்குடி மக்கள் மீதும் தனது போலீசை ஏவுவது மட்டுமின்றி, கட்சியின் குண்டர்படையான ‘ஹிம்மத் வாஹினி’யையும் ஏவி முதலாளித்துவ சேவையாற்றுகிறது. கொலைகார ப.சிதம்பரத்துடன் இணைந்துகொண்டு ‘காட்டு வேட்டை’ என்ற உள்நாட்டுப்போரை மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடுகின்ற மக்களின் மீது நடத்திவருகிறது, மே.வங்க சிபிஎம் அரசு.

மேற்கு வங்கத்தில் நடைபெறுகின்ற சாதாரண தேர்தல் மோதல்களில் கூட துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடந்தான் மம்தா கட்சி உள்ளிட்ட ஏனைய ஓட்டுக்கட்சிகளுடன் மோதலில் ஈடுபடுகிறது, சி.பி.எம்.கட்சி. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அத்தகைய ஆயுத மோதல்களில் ஈடுபட்டது அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளிவந்தது. தொலைக்காட்சிகளில் நேரடியாகவே இந்த மோதலைப் பார்க்கமுடிந்தது.

எனவே, இவர்கள் பேசுகின்ற அகிம்சை வழி என்பது முதலாளித்துவத்தை எதிர்ப்பதாக பம்மாத்து செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், முதலாளித்துவத்திற்கு எதிரான எளிய மக்களின் போராட்டம் என்று வரும்போது, அகிம்சையெல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு, அரச பயங்கரவாத நடவடிக்கைகளை கையிலெடுத்துக் கொள்கிறது.

ஆனால், உண்மையான கம்யூனிஸ்டு புரட்சியாளர்களோ, ஏகாதிபத்திய-முதலாளித்துவத்தின் கோர பிடியிலிருந்து அப்பாவி உழைக்கும் மக்களை மீட்பதற்காகவே ஆயுதங்களைக் கையிலெடுக்கின்றனர். மக்கள் பிரச்சினைகளுக்காக, தற்காப்பு நிலையில் கூட புரட்சியாளர்கள் ஆயுதம் பிடிக்கக்கூடாது என்று பாசிசக் கூப்பாடு போடுகின்ற போலிமார்க்சிஸ்டு கட்சி, ஓட்டுப்பொறுக்குவதற்கான தேர்தல் குழாயடி சண்டையில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு வெறியாட்டம் போடுகிறது. இதுதான் சி.பி.எம். கட்சி வலியுறுத்துகின்ற ‘அகிம்சைப் புரட்சி’யாகும்.

டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு நந்திகிராமத்து விளைநிலங்களைத் தாரைவார்த்து, தொழில் வளர்ச்சி புராணம் பாடிய தமது கட்சியின் இழிநிலை குறித்து பெயரளவுக்கேனும் அறிவுநாணயத்தோடு, நண்பர் மாதவராஜ் பதிலளிப்பாரானால், போபால் மக்களுக்காகப் பதியப்பட்ட அவருடைய கட்டுரையின் வரிகளை உண்மையென்று ஏற்பதோடு, மாதவராஜை மனமாற பாராட்டவும்கூட செய்யலாம். மாறாக, வழக்கமாக இருப்பதைப் போல கள்ள மவுனம் சாதிப்பாரானால், அல்லது இத்தளத்தின் வாசகர்களின் மறதியை எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பாரேயானால், அவருடைய பதிவு சொல்லும் செய்திகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை நமது வாசக நண்பர்கள்தான் சொல்லவேண்டும். நன்றி!

தோழமையுடன்,
ஏகலைவன்.

vinodh said...

//மாறாக, வழக்கமாக இருப்பதைப் போல கள்ள மவுனம் சாதிப்பாரானால், அல்லது இத்தளத்தின் வாசகர்களின் மறதியை எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பாரேயானால், அவருடைய பதிவு சொல்லும் செய்திகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை நமது வாசக நண்பர்கள்தான் சொல்லவேண்டும். நன்றி!//

மாதவராஜின் மௌனத்தை அவரது மாமனார் ஜெயகாந்தனையும் கணக்கில் எடுத்துக் கொண்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும்

vinodh said...

அசுரன்
http://www.vinavu.com/2010/08/15/dow-get-out/#comment-28285

டௌ வை தொந்தரவு செய்தால் கழுத்தை நெரிப்பேன் – இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா!!

இது போலி சுதந்திரம் என்பதற்கு ஆதாரமாக இந்தியாவை அமெரிக்கா மிரட்டுகின்ற கடிதம் ஒன்று வெளிவந்துள்ளது. உலக வங்கியில் தனக்கான கடன் ஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கோரி அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்தில் ‘போபால் வாயுக் கசிவு வழக்கைத் தொடர்ந்து நடத்துவது இந்தியா அமெரிக்க பொருளாதார உறவை கெடுத்துவிடும்” என்ரு மிரட்டியுள்ளது அமெரிக்கா. இதன் பொருள் வெளிப்படையானது, புதிய தாராளவாத கொள்கையின் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் அவுட் போஸ்ட் அல்லது குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகளை முடக்குவேன் என்பதே அமெரிக்க மிரட்டலின் சாராம்சம்.

Pursuing Bhopal gas leak case can chill Indo-US biz relations: US official
http://timesofindia.indiatimes.com/india/Pursuing-Bhopal-gas-leak-case-can-chill-Indo-US-biz-relations-US-official/articleshow/6331976.cms

PTI, Aug 18, 2010, 08.06pm IST

US deputy NSA asks India to go slow on Dow chemicals
NEW DELHI: With India pursuing efforts to make Dow Chemicals pay higher compensation in the Bhopal gas disaster, a senior US official reportedly asked the government not to persist with it so as to avoid any “chilling” in the investment relationship between the two countries.

“We are hearing a lot of noise about the Dow Chemical issues. I am not familiar with all the details but I think we want to avoid development which put a chilling effect on our investment relationship”, US Deputy National Security Advisor Froman Michael wrote to Ahluwalia in a recent e-mail, Times Now reported today.

His remarks came in response to Ahluwalia’s e-mail in which he sought US help in ensuring that India gets accommodation by continuing to get concessional aid from the World Bank’s soft-lending arm IDA.

When asked about this e-mail exchange, Ahluwalia did not said he was not involved in any discussions with the US on issues that are sub judice — a reference to the Bhopal case.

“I don’t interpret from Froman’s email that there is any link between two (Dow Chemicals and World Bank).” Asked about the US “pressure” to go slow on Dow Chemicals, Ahluwalia told the channel, “I don’t regard these e-mails as pressure at all.”

Froman reportedly assured Ahluwalia that US would take care of India’s request. “We are aware of this issue and we will look into it. While I have got you, we are hearing a lot of noise about the Dow Chemical issues. I trust that you are monitoring it (Dow Chemical issue) carefully,” Froman replied to Ahluwalia according to the TV Channel report.

Meanwhile, official sources said the government’s stand is clear as contained in Home Minister P Chidambaram’s statement in Parliament last week during a debate on the Bhopal disaster.

On the liability of Dow, Chidambaram had said in Rajya Sabha that there are three players — Union Carbide, Dow and Eveready.

Once the Madhya Pradesh High Court fixes liability, “we will certainly hold that company or those companies liable for remediation and whatever we had done by way of remediation before the liabilities are crystallised we will ask for restitution. We are not allowing anyone to go scot-free”.

Post a Comment

Copyright © போபால்