Showing posts with label சித்ரா. Show all posts
Showing posts with label சித்ரா. Show all posts

போ(ங்காட்ட)பால் தீர்ப்பு - சித்ரா

9 comments

இந்த தீர்ப்பு, ஒரு தனிப்பட்ட சம்பவத்தில் உள்ள "ஆடு புலி ஆட்டமாக" என்னால் பார்க்க முடியவில்லை.... இத்தனை நீதிபதிகள், ஒரே வழக்கில் மாறி வரும் போதும் கால தாமதமும், பண பலமும் கடுமையாக வழங்க வேண்டிய தண்டனையை நீர்த்து போக செய்து விட்டன.

இந்தியா ஒரே தேசமாக இல்லாத நிலையில் கூட, "வெள்ளையனே வெளியேறு" என்று ஒன்று பட்டு , அநியாய அடக்கு முறைகளுக்கு எதிராக போர் கொடி தூக்கி அடிமைத்தனத்தில் இருந்து மேலோங்கி சுதந்தர காற்றை சுவாசிக்க முடிந்தது....

இன்று - ஒரே இந்தியாவாக.... இந்தியனுக்கு என்று தனித்துவ அடையாளங்களுடன் உலக அரங்கில் காணப்படும் இந்த வேளையில், இப்படி ஒரு தீர்ப்பு வந்து இருப்பது எதை காட்டுகிறது?

இந்தியா, இன்னும் பணத்துக்கும் மனசாட்சியை கொன்று விட்டு அரசியலும் வாணிகமும் (politics, business and industrial production) செய்பவர்களுக்கு அடிமையாய் இருக்கிறது என்றா?

இல்லை, இந்தியர்கள் சுதந்தரத்துக்கு பின், சுகவாசிகளாய் - சுயநலக்காரர்களாய் - தன் கவலை மட்டுமே பெருங்கவலை என்ற குறுகிய வட்டத்துக்குள் வந்து விட்டார்கள் என்றா?

நாட்டில் ஒரு பகுதியினர் அடக்கப்பட்டால், மற்றவர்கள் வெகுண்டு வந்து ஆவன செய்வார்கள் என்ற தேசிய உணர்வு மக்கி விட்டது என்றா?

காரணங்கள் அனைத்தும் தெரிந்தும், கண்டும் காணாதது போலவும் புரிந்தும் புரியாதது போலவும், 'தன் வேலையே தனக்கு உதவி' என்று இருக்க வேண்டிய கட்டாயத்துக்குள் சமூதாய அமைப்பு தள்ளி விடுகிறது என்றா?

தலைவலியும் காய்ச்சலும் வந்தவனுக்கு மட்டும் தான் என்று ஒதுங்கி போக பழகிவிட்ட மெத்தனப் போக்கு என்றா?

பாரதியின் பாடலில் கண்ட அக்கினி பற்றி கொள்ள - தாகூரின் கவிதைகளில் கண்ட தேசப்பற்று மனதில் நிறைய - சுதந்தர போராட்ட வீரர்களின் ஆவேசமான பேச்சுக்களில் பொங்கி எழுந்து வந்த இந்தியர்கள், இன்று வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் தொலைகாட்சி மற்றும் சினிமா மாயையில் மயங்கி, உணர்வுகளை தொலைத்து விட்டார்கள் என்றா?

மக்களின் பலவீனங்களை முழுமையாக அறிந்து கொண்டு, "என்ன செய்து விடப் போகிறார்கள்?" என்ற தைரியத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு..... மக்களின் அவல மன நிலையை "அவர்கள்" நன்கு புரிந்து கொண்டு, தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு உள்ளதை வெளிப்படுத்தும் தீர்ப்பு.

ம்ம்ம்ம்...... தீர்ப்பை திருத்த முடியாது போகலாம். போபாலில் இழந்த உயிர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய் இருந்து இருக்கலாம்.....

ஆனால், மக்களிடையே ஒரு விழிப்புணர்வு வேண்டும்.... இனி, ஒரு இந்திய சகோதரன் அழும் போது, கைகளில் டிவி ரிமோட் வைத்து கொண்டு, "அடுத்து என்ன ப்ரோக்ராம்?" என்று தேடி கொண்டு இருக்காமல், அதே கையால், அழுபவரின் கண்ணீர் துடைக்க மனம் பதற வேண்டிய உள்ளம் வேண்டும். அந்த மாறுதல் வரும் போது, இந்த மாதிரி மீண்டும் ஒரு சம்பவம் நடக்கும் அளவுக்கு ஒரு பொறுப்பற்ற சூழ்நிலையோ - இல்லை, அதற்கு இப்படி ஒரு "கண்துடைப்பு" தீர்ப்போ எப்படி வர இயலும்?

முதாலாளித்துவம் கொழுத்து போய் வளருகிறது என்று சாடுவது மட்டும் போதாது..... சராசரி மனிதனும் மனித நேயத்தை, பிறர்க்கென வாழும் மனதை, தேசிய உணர்வை - முழுவதுமாய் பணத்துக்கும் தற்பெருமைக்கும் தன்னலத்துக்கும் அடகு வைக்க கூடாது.


-சித்ரா

பதிவுலக தோழி "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா அவர்கள் இத்தளத்திற்காக எழுதிக் கொடுத்தது. இன்னும் பல பதிவர்கள் மற்றும் வாசகர்களிடமிருந்து இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.


Copyright © போபால்