முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே, “இது பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக இல்லை” என ஒரு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கோபத்தோடு கருத்து தெரிவிக்குமளவுக்கு போபால் வழக்கில், அநீதி அப்பட்டமாய் தோலுரிந்து போயிருக்கிறது.. மிகப்பெரும் துயரங்களையும் காலம் ஆற்றிவிடும் என்பதும் பொய்யாகி இருக்கிறது. ‘இதுவும் கடந்து போகும்’ என்று சமாதானம் செய்ய முடியாமல் 26 ஆண்டுகள் கழித்தும், கொந்தளிக்கச் செய்கிறது. ஆறாத ரணங்களைக் கீறித் துடிக்க வைக்கிறது.
1984 டிசம்பர் இரண்டாம் நாள் குளிர் இரவில், இந்தியாவே துயில் கொண்டிருந்த நேரம், போபால் மரணத்தின் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தது. யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து நாற்பதாயிரம் கிலோவுக்கும் அதிகமான ‘டாக்சிக்’ வாயு கசிந்து, வெள்ளைப் புகை மண்டலமாய் விரிந்து, அயர்ந்து கிடந்த மனிதர்களுக்குள் நுழைய ஆரம்பித்தது.. தொண்டை காந்தலெடுக்க இரும ஆரம்பித்தவர்கள் உடலின் தசைத் துணுக்குகளெல்லாம் மிளகாயின் காந்தலெடுக்க துடித்துப் போனார்கள். கண்கள் எரிய, எங்கும் “ஐயோ, ஓடுங்கள், ஒடுங்கள் என கூப்பாடுகளும், இதயம் அறுந்து வெளியே வந்து விழுமாறு இருமல்களுமாய் கேட்டன. என்ன, ஏது என்று அறியாமல், இலக்கற்று ஓடியபடியே விழுந்தார்கள். மாடுகளும் கதறியபடி, மனிதர்களை முட்டித் தள்ளி ஓடின. யார், எங்கே என யோசிக்க முடியாமல் புத்தி பேதலிக்க, குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போயின. விடிந்த போது ஈசல் பூச்சிகளைப் போல நகரமெங்கும் மனித உடல்கள் அங்கங்கு கிடந்தன. இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோக, ஆறு லட்சத்துக்கும் மேலே மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயிருந்தனர். உலகமே விக்கித்துப் போனது.
இப்படியொரு பயங்கரம் நிகழக்கூடும் என பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. செப்டம்பர் 1982ல் ராஜ்குமார் கேஷ்வானி என்னும் பத்திரிக்கையாளர், “விழித்துக்கொள்ளுங்கள் போபால் மக்களே, நீங்கள் எரிமலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என யூனியன் கார்பைடின் ஆபத்து குறித்து விளக்கியிருந்தார். 1984 நவம்பர் கடைசி வாரம் வரைக்கும், இது குறித்து நான்கு கட்டுரைகள் எழுதியிருந்தார். விபத்து நடப்பதற்கு முன்னர் பலமுறை யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ‘பாதுகாப்பு நடவடிக்கைகள்’ குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இருபத்தைந்துக்கும் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அவைகளை சரிசெய்யத் தவறியதன் விளைவுதான் இந்த பேரிழப்புகள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு தடித்த பெரும் சட்ட புத்தகங்கள் தேவையில்லை. நேர்மையும், இதயசுத்தியும், குறைந்தபட்ச விஞ்ஞான அறிவுமே போதும். ஆனாலும் சாலை விபத்துக்குரிய லட்சணத்துடன் வழக்கு நடத்தப்பட்டு, ‘கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து’ என்ற தீர்ப்பாகி இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஏழு உயரதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ருபாய் (2000 டாலர்!) அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத முதலாளித்துவத் திமிரில் செய்யப்பட்ட படுகொலைகளுக்கும், பஞ்சமா பாதகத்திற்கும் கொடுக்கப்பட்ட தண்டனையாம் இது. இந்த தேசத்தையும், இந்த மண்ணையும் தங்கள் வீட்டு குப்பைத் தொட்டியாகக் கூட மதிக்காத அந்நிய, அமெரிக்க அயோக்கியர்களுக்கு வழங்கப்பட்ட அபராதமாம் இது! வாழிய பாரத மணித்திரு நாடு!
அந்த விஷக்காற்றின் உக்கிரத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் இப்போதும் பார்க்க முடிகிறது. அடுத்த தலைமுறைக்கும் அது தாவி இருப்பதை, குழந்தைகளிடம் தென்படுவதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். நிலத்தடி நீரும் பயன்படுத்த முடியாதபடி மோசமாகி இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை கிடைத்த நிவாரணம் என்பது தலா இருபத்தையாயிரம் மட்டுமே. அதுவும் இரண்டு தவணகளாக 1994 மற்றும் 2004ல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போபால் துயரத்தை எதிர்த்து ஒரு அமைப்பை நிறுவி இன்று வரை போராடி வருகிற ஜெயப்பிரகாஷ் இதனைச் சொல்லி இருக்கிறார். அதுவும் இறந்து போனவர்கள் வெறும் மூவாயிரம் என்ற கணக்கில் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த உணமைகளையும், புள்ளி விபரங்களையும் அறிய அறிய, இந்த அமைப்பின் கோரமுகமும், கொடூர குணமும் வெட்ட வெளிச்சமாகிறது.
நமது சட்டத்தில், இதுபோன்ற தவறுகளுக்கு criminal liability சுமத்தும் ஷரத்துக்கள் இல்லையெனவும், அதை சரிசெய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இந்தத் தீர்ப்பு குறித்து ஆராய்ந்திட அமெரிக்க் பக்தரும், பெருமுதலாளிகளின் விசிறியுமான ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைத்திருப்பதாகவும் சொல்லப்ப்படுகிறது. நீதிக்கு குழி தோண்டியாகிவிட்டது. இனி புதைக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான்!
இந்தத் தீர்ப்பு இன்னொன்றையும் சூட்சுமமாக தெரிவிக்கிறது. அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் குறித்த சட்ட வரையறைகளில் அரசின் நிலைபாடு குறித்த விளக்கம் இருக்கிறது. போபால் விஷக்காற்றை விடவும் பல நூறு மடங்கு ஆபத்து விளைவிக்கும் அணு உலைகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ‘கவனக்குறைவால்’ விபத்து ஏற்பட்டாலும், இதே தீர்ப்புதான் அந்த முதலாளிகளுக்கும் என தெளிவாக்குகிறது. தன் வீடு எரிந்து சாம்பலானாலும், அமெரிக்காவுக்கு குடைபிடிக்கும் இந்த அயோக்கியத்தனந்த்தை என்னவென்பது? “விழித்துக் கொள்ளுங்கள் மக்களே”- இதுதான் போபால் துயரமும், போபால் தீர்ப்பும் நம் அனைவருக்கும் சொல்லியிருக்கும் செய்தியும், எச்சரிக்கையும்..
இந்த பெருந்துயரத்திற்கும், பேரிழப்புகளுக்கும் காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தருவதும்தான் நேர்மையான அரசின் கடமையும் நெறியுமாகும். அந்த யோக்கியதை இதுவரை இருந்த எந்த மத்திய அரசுக்கும் இருக்கவில்லை. நீதி கிடைக்கும் வரை உக்கிரத்துடன் இயக்கங்களை நடத்த ஜனநாய்க சக்திகளும், சமூக ஆர்வலர்களும் முன் வரவேண்டும்! “மக்களின் கொந்தளிப்பும், ஆவேசமும் அதிகமாகியதால்தான், ஆண்டர்சனை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி ஆகியது” என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்போது சொல்கிறார். ஆம், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களும் இதே காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய ஒருநாள் வரவேண்டும்!
அப்போதுதான் இது நமது தேசமாக இருக்கும்!
- மாதவராஜ்
பி.கு: இது நண்பர் மாதவராஜ் 14-ஜீன்-2010 அன்று அவரது தீராத பக்கங்கள் வலைப்பூவில் எழுதியது. அவரது அனுமதியுடன் இங்கு மீள்பதிவிடப்பட்டிருக்கிறது.